மீண்டும் சோதனை

by Admin / 30-07-2019
மீண்டும் சோதனை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு சபரிமலையின் பாரம்பரிய வழிபாட்டு முறையை தலைக்குப்புற போட்டு விட்டது. பெண்கள் மீது பாகுபாடு காட்டக்கூடாது.

மீண்டும் சோதனை

பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் கோயிலுக்குள் பெண்களை செல்ல அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கோயிலில் சில பெண்கள் நுழைய முயன்றபோது, அப்பகுதியே போர்க்களமானது. பொதுமக்கள் போராட்டம், போலீசார் தடியடி, வாகனங்கள் சூறை என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அங்கு நடந்தேறின. சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில பெண்கள் விளம்பரத்துக்காக கோயிலுக்குள் நுழைய முயன்றதற்கு கேரள அமைச்சரே கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாளுக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஒருநாள் மட்டுமே நடை திறந்திருக்கும் சூழலில், இன்றும் இளம்பெண்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சபரிமலை சன்னிதானத்திற்கு 50 வயதிற்கு மேற்பட்ட பெண் போலீசாரை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை சபரிமலையில் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கேரள மாநில காவல் ஆணையர் நடை திறக்கும்போது பக்தர்கள் போராட்டம் நடத்தினால் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு கூட நேரிடலாம் என கேரள ஐகோர்ட்டில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளார். எனவே பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பார்கோடு வழங்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் கீழே திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் நீலிமலை, சரங்குத்தி வழியாக செல்ல வேண்டும் எனவும், தரிசனம் முடிந்து சுவாமி அய்யப்பன் ரோடு வழியாக திரும்ப வேண்டும் எனவும் போலீசார் கறார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த முறை போல பெண்களை பாதி வழியிலே பாதுகாப்பு குளறுபடிகளால் திருப்பி அனுப்பாமல், இம்முறை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற கேரள அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் போராட்டம், அரச குடும்பத்தின் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை ஆகியன இம்முறையும் சட்டம் ஒழுங்கிற்கு சவாலாகவே இருக்க கூடும்.

Share via