தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்  அமல்

by Editor / 05-05-2021 04:03:24pm
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்  அமல்


மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதித்து அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்  அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. புதிய கட்டுப்பாடுகள்  (மே 6 ஆம் தேதி) காலை 4 மணி முதல் மே 20 ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 
3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்த தடையுமின்ற செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை.மாநகராட்சி நகராட்சிப் பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.
நாளை முதல் சென்னையில் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via