ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்; அழகிரி

by Editor / 06-05-2021 12:18:38pm
ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்; அழகிரி

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக 133 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாளை (மே 7) காலை 9 மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் அழகிரி இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வந்தது.இந்நிலையில், ஸ்டாலின் வெற்றிப்பெற்றதற்கு அழகிரி தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அழகிரி கூறுகையில், 'தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்,' எனக் கூறியுள்ளார். இதன்மூலம் திமுக.,வில் அண்ணன், தம்பி இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via