புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்

by Staff / 24-11-2018
புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்

இத்தாலியின் மிலன் நகரில் நடந்துவரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய மோட்டார் சைக்கிள் டூரர் எனப்படும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் என்ற சாகச ரக மாடலை தழுவி டூரர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ் மாடலைவிட எக்ஸ்பல்ஸ் 200 டி மாடல் 30 மி.மீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்இடி விளக்குகள், புளூடூத் இணைப்பு நுட்பம் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், நேவிகேஷன் வசதி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது. எம்ஆர்எப் ரேவ்ஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் பைக்கில் இருந்த அதே 198சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இப்புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எனினும், இன்ஜின் டியூனிங்கில் மாறுபடும் வாய்ப்புள்ளது. இப்புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் எதிர்பார்க்கலாம். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. கபே ரேஸர், டெசர்ட், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் பிளாட்- டிராக் ஆகிய வேறு புதிய பரிணாமங்களிலான மாடல்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்தடுத்து பல புதிய ரக மாடல்களை ஹீரோ நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.