மலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு

by Editor / 24-11-2018
மலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு

தமிழக - கேரள மலையோரம் மேற்கு தொடர்ச்சிமலையில் அழகுற அமைந்திருக்கும் திருமலைராயப் பெருமாள் கோயில் வரலாற்று பிரசித்தி பெற்றது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருந்த திண்டுக்கல் வட்டாரத்தில் 72 பாளைய பட்டுகளுள் இக்கோம்பையூரும் ஒன்றாக இருந்துள்ளது. அப்போது காஞ்சி அரியநாத முதலியார் அமைச்சராக இருந்தார். அப்போது மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னர், கோம்பை ஜமீன்தார் அப்பாஜி சித்தையகவுடர் ஆகியோரால் இக்கோயில் மற்றும் இங்குள்ள மிகப்பெரிய தேர், மற்றும் ஊரும் உருவானதாக கூறப்படுகிறது.

மதுரை திருமலைநாயக்க மன்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 64 திருக்கோயில்களுக்கும் மங்கலமான நாளில் திருப்பணிகளை நிறைவு செய்தார். அந்த கோயில்களில் திருமலைராய பெருமாள் கோயிலும் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்து உண்டு. மூலமூர்த்தியான அரங்கநாதர் எனும் திருமலைராய பெருமாள், கோயில் மட்டும் ராமக்கல் சிகரத்தின் அடிவாரத்தில் சித்து நிகழ்த்தி காட்டிய அதே இடத்தில் காண்பவர் கண்ணையும், கருத்தையும் கவருமாறு நிற்கிறார். 200 ஆண்டுகள் ஆடாக வாழ்வதை விட 2 நாட்கள் புலியாக வாழ்வதே மேல் என்று சூளுரைத்த மைசூரை ஆண்ட சுதந்திர போராட்ட வீரர் திப்புசுல்தான், வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டபோது கோம்பை ஜமீன்தார், அப்போது சேர்வைக்காரர் சேவுகர் என்னும் படைத்தலைவரை அனுப்பி தமது படைகளை தந்துள்ளார். இதற்கு கைமாறாகவே சீரங்கபட்டினத்தில் வாழ்ந்த திப்புசுல்தான், ஒரு பல்லக்கை கோம்பை ஜமீனுக்கு அனுப்பினார் என்றும், அந்த பல்லக்கே கோம்பையின் பொது தெய்வமாக போற்றப்பட்டு வணங்கப்படும் அரங்கநாதர் ஊர்வலத்திற்கு இப்போதும் பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. எத்தனையோ திருவிழாக்கள் இந்த ஊரில் நடத்தப்பட்டாலும் புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் நடத்தப்படும் திருவிழாவிற்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

Share via