மஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்?

by Editor / 24-11-2018
மஹாலக்ஷ்மி, தாமரையை ஏன் ஆசனமாகக் கொண்டாள்?

பகவத் கீதை - 75 ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய: லிப்யதே ந ஸ பாபேன பத்மபத்ரமிவாம்பஸா (5:10)

தன் எல்லா கர்மங்களையும் பரமாத்மாவுக்கே அர்ப்பணிப்பவன், மோக வயப்படமாட்டான். இப்படி மோகத்தைத் தியாகம் செய்து கர்மங்களை இயற்றுபவன் தாமரை இலை தண்ணீர்போல பாபங்கள் ஒட்டாதவனாக இருப்பான். பொதுவாகவே பரமாத்மாவிடம் தன்னை சமர்ப்பிப்பது என்றால் என்ன? ‘என் வாழ்க்கையில் இத்தனை துயரம், இத்தனை வருத்தம், இத்தனை நஷ்டம்… இவையெல்லாவற்றையும் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு விடமாட்டாயா! என்றுதான் நம்மில் பெரும்பாலோர் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். அதாவது துன்பமெல்லாம் இறைவனுக்கு, அதேசமயம் அவரே அருளிய இன்பமெல்லாம் நமக்கு! இரண்டையுமே நமக்குத் தருபவன் இறைவன்தானே! இன்பத்தை மட்டும் நம்மிடம் இருத்திக்கொண்டு, துன்பத்தை மட்டும் நம்மிடமிருந்து இறைவன் எடுத்துக்கொண்டு விடவேண்டும் என்று யாசிப்பதுதான் இன்றைய யதார்த்தம். இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், தன்னுடைய குறிப்பிட்ட துன்பத்தை இறைவன் களைந்து விட்டாரானால், அவருக்கு இன்ன பரிகாரம் செய்வதாக வேண்டிக் கொள்பவர், அவ்வாறு துன்பம் விலகிய பின்னர் தான் வேண்டிக் கொண்டது போல நடந்து கொள்ளாததுதான். ஆமாம், யாரேனும் நினைவுறுத்தினாலும், ‘இப்போது என்ன அவசரம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம், பகவான் காத்திருப்பார்’ என்று விதண்டாவாதம் பேசுகிறோம். யாராவது ‘கடவுளே, எனக்கு இவ்வளவு பணம் இருக்கிறதே, இதை எடுத்து இல்லாதவருக்குக் கொடுத்துவிடேன்’ என்று வேண்டிக் கொள்கிறோமா? மாட்டோம். ஏனென்றால் அப்படி ஒருவேளை இறைவன் தன்னிச்சையாக எடுத்துக் கொடுத்து விடுவாரோ என்ற பயம்! இத்தகையவர்கள்தான் தானத்துக்கு நாள் பார்த்து, நேரம் குறித்து, தானம் கொடுத்தது போகத் தன்னிடம் மீதமிருப்பது தன் ‘தேவை’க்குப் போதுமானதாக இருக்குமா என்றெல்லாம் யோசித்து, யோசித்து தானம் கொடுப்பார்கள். ஒரு செல்வந்தர் இறந்து போனார். அண்ணன், தம்பி இருவரும் தந்தையாரின் சொத்துக்கு வாரிசானார்கள். ஆனால் செல்வந்தரோ, மூத்தவன் விருப்பப்பட்டதை இளையவனுக்குக் கொடுக்கலாம் என்று உயில் எழுதி வைத்திருந்தார். இளையவனோ தனக்குச் சம பங்கு வேண்டும் என்று வாதிட்டான். ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. ஊர்ப் பெரியவர் உயிலை வாங்கிப் படித்தார். பிறகு அண்ணன், தம்பி இருவரையும் பார்த்தார். அண்ணன் ஏற்கெனவே வசதியானவனாகத் தெரிந்தான். ஏதோ வியாபாரம் செய்கிறான் போலிருக்கிறது. ஆனால் தம்பியோ வறியவனாகத் தோன்றினான். அண்ணனைப் போன்ற தகுதியோ அல்லது அவனுக்குக் கிடைத்தது போன்ற வாய்ப்போ இவனுக்குக் கிடைக்கவில்லை என்றும் புரிந்தது. எதுவானால் என்ன, இருவருமே சம உரிமையுள்ள வாரிசுகள்தான்… பெரியவர், அண்ணனைப் பார்த்து, ‘உன் தந்தையார் சொத்தில் உனக்கு விருப்பமானவை என்பவை எவை?’ என்று கேட்டார். அவனோ மிகப் பெரிய பட்டியல் போட்டான். கடைசியில் தம்பிக்கு மிஞ்சியது வயக்காட்டை ஒட்டினாற்போல இருக்கும் ஒரே ஒரு குடிசைதான். தம்பியோ தவித்தான். எனக்குக் கொஞ்சம் நிலமாவது கொடுத்தால், நான் உழுது, பயிரிட்டு என் வாழ்க்கையை ஓட்டிக்கொள்வேன், என்று கெஞ்சினான். அதெல்லாம் முடியாது. அப்பா, நான் விரும்பியதை மட்டும்தான் உனக்குக் கொடுக்க உயில் எழுதி வைத்திருக்கிறார். என்று வாதிட்டான் அண்ணன். அப்படியானால் சரி, பெரியவர் குறுக்கிட்டார். அதாவது நீ உனக்கு விருப்பமானவை என்று பட்டியலிட்டிருப்பதெல்லாம், உன் தம்பிக்குதான். அப்படித்தானே உன் அப்பா உயில் எழுதி வைத்திருக்கிறார்? என்று கேட்டார். அண்ணன் திடுக்கிட்டான். அண்ணன் விரும்பியதை அவன் எடுத்துக்கொண்டு, மிஞ்சியதை தம்பிக்குக் கொடுக்கலாம் என்று உயில் சொல்லவில்லையே! அண்ணன் விருப்பப்பட்டதை தம்பிக்குக் கொடுக்கலாம் என்றுதானே சொல்கிறது? அதனால் அண்ணன் விரும்பிய எல்லா சொத்துகளும் தம்பியைத்தான் சேரவேண்டும் என்று பெரியவர் தீர்ப்பு சொன்னார். அதைக் கேட்டு அண்ணனை விட, தம்பிதான் பெரிதும் சங்கடப்பட்டான். வேண்டாம், இருவருக்கும் சம அளவில் பகிர்ந்து கொடுங்கள் என்று குறிப்பிட்டுத் தன் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தினான். அதுபோல, நாம் விரும்பியதைத்தான் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்; இறைவன் விரும்புவதையல்ல. இறைவன் விரும்புவது எது என்று தெரியாத பட்சத்தில் நமக்குப் பிடித்ததை நிவேதனமாகக் கடவுளுக்கு சமர்ப்பித்துவிட்டு, பிறகு அதை நாம் எடுத்து உண்கிறோம். இப்படித்தான் நாம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதும்! கடவுள் நம் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றவும் செய்துவிட்டார். ஆனால், நம் நேர்ச்சையை ஏற்றுக்கொள்ள கடவுள் காத்திருக்க மாட்டாரா என்ன, என்றெல்லாம் நாம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். இப்படியில்லாமல், நம்மிடம் உள்ள அனைத்துமே இறைவனுக்கு சமர்ப்பணம் என்ற மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நம்மை துன்பம் நெருங்கவும் அஞ்சும். நாம் இறைவனிடம் கெஞ்சவேண்டிய அவசியமும் இருக்காது, வேண்டுதல், பிரார்த்தனை, நேர்ச்சி என்ற உபத்திரவம் எதுவும் இல்லை. நான் அனுபவிப்பதெல்லாம் பரந்தாமன் அருளியது. ஆகவே இவையெல்லாம் அவருக்கே சொந்தம். அதனால் அவருக்கு இவை எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதுதான் நியாயம் - இதுதான் ஞானிகளின் சிந்தனை. இப்படி நேர்ச்சைக் கடனை நிறைவேற்றாமல் ஒத்திப் போடுவதும், அல்லது முற்றிலுமாக மறந்தும் போவதும் எதனால்? நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதால்தான். ஏதேனும் வெற்றி என்றால், ‘நான் வென்றேன்’ என்கிறோம்; தோல்வி என்றால், ‘இறைவன் கண்ணை மூடிக் கொண்டு விட்டான்’ என்கிறோம். இரண்டுமே அவன் அளிப்பதுதான் என்பதே ஞானியின் நிலைப்பாடு. ‘அனைத்தும் பகவானுக்கு உரியதே’ என்ற மனோநிலை, ஒருவரை ‘அவரி’டமிருந்து வெளியேற்றி விடுகிறது. அங்கே ‘நான்’ மறைந்து போகிறது. இப்போது எந்த சங்கடம்தான் அவரைத் தீண்டிவிட முடியும்? தாமரை இலை தம் மீது தண்ணீரை ஒட்டிக் கொள்ள விடாது. முத்து முத்துகளாக நீர் உருண்டைகளை அது தன் மேல் தாங்கியிருக்குமே தவிர, அதனை ஈர்த்துக்கொள்ளாது, அதனுடன் கலந்து அதைப் பச்சை வண்ணமாக்காது. வேடிக்கை பாருங்கள், தாமரைக் கொடி வளரத் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்தத் தண்டு வளர, அது நீர் நிலைக்கு மேலே வந்து இலையையும், தாமரை மலரையும் பிறப்பிக்கவும் அதே தண்ணீர் தேவை. ஆனால், அந்த இலையோ, அந்தத் தண்ணீருடன் சேர்வதில்லை, சேர விரும்புவதில்லை! தன் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி எல்லாமும் எதையாவது ஒன்றைச் சார்ந்துதான் அமைகிறது என்றாலும், அவற்றை மட்டுமல்ல, அவற்றால் நேரும் விளைவுகளையும் தனக்குரியதாக எந்த ஞானியும் நினைப்பதில்லை. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் வாசனை சேர்த்தாலோ, அல்லது அதனை சாக்கடை நீராகவே மாற்றினாலோ, இரண்டையுமே தாமரை இலை ஏற்பதில்லை என்பதுதான். வாசனை நீர் என்பதற்காக அந்த நீர்த் துளிகளை ஏற்பதுவோ, சாக்கடை நீர் என்பதாலேயே அதை நிராகரிப்பதோ அது செய்வதில்லை. அதன் சுபாவம் எதனுடனும் பட்டுக்கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது. இதுதான் ஒரு ஞானியின் சுபாவம். இதை உணர்த்தத்தான், செல்வம் நிலையில்லாதது என்பதை அறிவுறுத்ததான், மஹாலக்ஷ்மி தாமரை மலர்மீது அமர்ந்திருக்கிறாள். மஹாலக்ஷ்மியின் திருமுகத்தைப் பார்த்தாலே, செல்வம் கோரும் யாசகத் தன்மை நம்முள் துளிர் விடும். ஆனால் அபய ஹஸ்தமாக அவள் காட்டுவது தன் பாதத்தை மட்டுமல்ல, தான் அமர்ந்திருக்கும் தாமரையையும்தான். ‘தாமரையைப் பார், அதற்கு ஆதாரமான அதன் இலையைப் பார். அந்த இலையில் ஒட்டாமல் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவோம் என்ற தவிப்புடன் உருண்டுகொண்டிருக்கும் நீர்த் துளிகளைப் பார்’ என்றும் அவள் அறிவுறுத்துகிறாள். அதாவது ‘உன்னிடம் சேர்ந்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கும் செல்வம், உனக்கு மட்டுமே உரியதல்ல; அது இல்லாத வறியவருக்கும் உண்டு. அவர்களுக்குக் கொடுக்கத்தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், உனக்குச் செல்வம் வழங்கியிருக்கிறேன்’ என்றும் வலியுறுத்துகிறாள். இப்படித் தாமரை இலைபோல வாழ்பவன் பிறக்கிறான், கர்மங்களில் ஈடுபடுகிறான். ஆனால் ஒன்றுடனும் அவன் ஒட்டுவதில்லை, பிறகு இறைவன் கருணைப்படி அவன் திருவடி சென்றடைகிறான். இவன் யாராலும், எதனாலும் தொடப்படுவதில்லை, ஈர்க்கப்படுவதில்லை, அதனாலேயே தன் வயம் இழப்பதில்லை. இதனாலேயே இவனை பாபம் தீண்டுவதில்லை, புண்ணியமும் இவனுக்கு மெருகேற்றுவதில்லை. ஏனென்றால், இயல்பான கர்மத்திலே பிறந்து, கர்மத்திலே வளர்ந்து, கர்மத்திலேயே நிலைபெற்றிருக்கும் ஒரு ஞானி, அதைவிட பேரியல்பான பிரம்மத்தைச் சார்ந்திருக்கிறானே, அதனால்தான். ‘எல்லாவற்றையும் செய்பவன் பகவானே’ என்று சகலத்தையும் இறைவனுக்காகத் துறப்பவனே தார்மீகவாதி. ஆண்டவனுக்கு பூஜை செய்வதையும் இவன், தான் செய்வதாகக் கருதிக்கொள்வதில்லை. அதுவும் இறையர்ப்பணம்தான்! ‘நான் பூஜை செய்தேன், நான் தியானம் செய்தேன்’ என்றெல்லாம் கூறிக் கொள்பவன் தார்மீகவாதியாக மாட்டான். உண்மையில் தியானம் என்பது என்ன? கஷ்டப்பட்டு, மூச்சடக்கிப் பிராணாயாமம் செய்வதா அல்லது எல்லாப் புலன்களை அடக்க முயற்சிப்பதா? அப்படியானால் அந்த முயற்சியில் தோல்வி கண்டு விரக்தி கொள்வானேன்? தியானம் என்பதன் பொருள் அதுவல்ல. தன்னை இறைவனுக்கு முற்றிலுமாக தானம் அளிப்பதுதான் தியானம். இந்த தியானம் ஆழ்கடலுக்குச் சமமானது. பரந்து விரிந்த வானுக்குச் சமமானது. அதாவது இது எல்லையற்றது. இதன் பரிமாணம் விரிவடைந்து கொண்டே போகும்போது இறைவனுடன் ஒன்றிவிடும் பேரானந்த அனுபவம் கிட்டுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இத்தகைய பேரின்பம் அடைந்தவர்கள் அமைதியாக இருப்பதுதான். அவர்கள் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, தன்னைக் காண்பதில்லை, தன்னை உணர்வதில்லை. எல்லாம் அந்தப் பரம்பொருளே, அதன் அருளே என்று மட்டும்தான் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் மீண்டும், மீண்டும் அர்ஜுனனிடம் வலியுறுத்துவது இதைத்தான்: ‘நீ போரிடவில்லை, நீ எதிரிகளை மாய்க்கவில்லை, நீ வெற்றி பெறவில்லை. எல்லாவற்றையும் செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப் போவது நானே! ஆகவே போரிடுதல் உன் கர்மம், அவ்வளவுதான். உன்னையே அறியாமல் நீ சுவாசிப்பது போல. சுவாசத்தின் பயனாகிய உயிர் வாழ்தலை எதிர்பார்த்தா நீ அதைச் செய்கிறாய்? அது உன் கட்டுப்பாட்டுக்கும் மீறியது. மூச்சையடக்கி நீ எத்தனை நேரம்தான் இருக்க முடியும், அல்லது மூச்சை முற்றிலுமாக வெளியேறிவிட்டு இருக்க முடியும்? ஒரு கட்டத்தில் திணறிப் போய்விட மாட்டாயா? இந்த தர்மசங்கடத்துக்கு நீ ஆட்படுவானேன்? இயல்பாக இரு - சுவாசிப்பது போல. இந்தப் போரையும் இயல்பாக நடத்து - எந்த தர்மசங்கடத்துக்கும் ஆட்படாமல்.’

Share via