மே 14 அட்சய திருதியை

by Editor / 24-07-2021 07:22:22pm
மே 14 அட்சய திருதியை

 

சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். , இந்தநாளில் தானம் செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். ஒருவர் எப்போது தானம் செய்வார்? தனக்குத் தேவையானதெல்லாம் இருப்பதற்கும் மேலாக பொருட்கள் இருந்தால்,தானம் செய்வார். இந்தநாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்கினால், பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். நம்மையும் நம் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்கள்.

பித்ரு சாபம் என்பதும் பித்ரு தோஷம் என்பதும் முழுவதுமாக நீங்கிவிடும் என்பதாக ஐதீகம்.மகா விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள் போன்றன இந்த அட்சய திருதியை நாள் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்கச் சென்ற பொது கொண்டு சென்ற மூன்று பிடி அவலை உண்டு பதிலாக கோடி கோடியாக செல்வங்களைக் அள்ளிக்கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நாள் என்றே கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது உணவுக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் அட்சய பாத்திரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத உணவுப்பொருட்களைப் பெற்று புசித்ததாகவும் மகாபாரத கதையில் சொல்லப்பட்டுள்ளது.சிவபெருமான் தன் பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டதும், துச்சாதனன் பாஞ்சாலியின் புடவையை உருவிய பொது கண்ண பரமாத்மா அட்சய என்று கூறி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாள் என்றும் அதனால் அட்சய திருதியையில் எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது போன்றன அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும் எனவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக அன்னை லட்சுமி விளங்குகின்றாள்.

அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். அதை வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கலாம்.


மேலும் நம் வீட்டு உணவில் மிகப்பெரிய அங்கம் வகிப்பது உப்பு. நாம் என்னதான் சாப்பிட்டாலும், எவ்வளவு வகைவகையான உணவுகளைச் சாப்பிட்டாலும் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்றுதான் பழமொழி அமைந்திருக்கிறது. ஆகவே, அட்சய திருதியை நன்னாளில், உப்பு வாங்குவதும் உப்பு தானம் செய்வதும் கோடி பலன்களைத் தரக்கூடியவை.

வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வர்யங்களும் வளரும். குடும்பத்தில் இதுவரை இருந்த கஷ்டங்கள், தரித்திரங்கள், துக்கங்கள் அனைத்தும் விலகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வது உறுதி.காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். வெண்ணிற மலர்கள் சூட்டி தெய்வங்களை வணங்குங்கள். உப்பு பாக்கெட்டை சுவாமிக்கு முன்னே வைத்து தீபாராதனை காட்டி, பின்னர் எப்போதும் போல் உப்பு வைக்கும் பாத்திரத்தில், இந்த உப்பையும் சேருங்கள். வளமும் நலமுமாக வாழ்வீர்கள்!

 

Tags :

Share via