பள்ளி மாணவிகளை குறிவைத்து நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்! - 68 பேர் பலி

by Editor / 10-05-2021 10:34:57am
பள்ளி மாணவிகளை குறிவைத்து நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்! - 68 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் தஸ்த் இ பர்ச்சி மாவட்டத்தில் ஷியா பிரிவு மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சிறுபான்மையின மக்களான ஷியா மக்கள் மீது அந்நாட்டின் இஸ்லாமியப் பிரிவுகளில் ஒன்றான சன்னி பிரிவு முஸ்லிம்கள் அடிக்கடி தாக்குதல்களையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்களைத் தவிர்த்து தாலிபான் பயங்கரவாதிகளின் அச்சறுத்தலும் அப்பகுதியில் மிகுதியாக உள்ளது.


கடந்த சில வருடங்களாக ஷியா சமூக மக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சனிக்கிழமை அன்று ஒரு மாபெரும் மனிதநேயமற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறியது. அதில் 68 பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தஸ்த் இ பர்ச்சி மாவட்டத்தில் ஷியா சமூக பெண் பிள்ளைகளுக்காக பிரத்தியேக பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டுகள் வைத்து மாணவிகளைக் கொல்லத் திட்டமிட்டு, சயீத் அல்-ஷுஹாதா பள்ளிக்கு முன்னால் நின்றிருந்த ஓர் காரின் அடியில் வெடிகுண்டைப் பயங்கரவாதிகள் பொருத்தினர். மாணவிகள் பள்ளிக்கூடத்திற்குள் பாடம் படித்துக் கொண்டிருந்த வேளையில் பயங்கர சத்தத்துடன் காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. பள்ளிக்கூடத்தின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் வெடிகுண்டின் தாக்கமானது பள்ளிக்கூடத்தில் எதிரொலித்தது. படித்துக் கொண்டிருந்த மாணவிகள் வெடிகுண்டு வெடித்ததில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற முயன்ற போது பள்ளி அருகே தொடர்ச்சியாக 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.

அதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு மீட்டனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் முதலில் வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், பள்ளிக்குக் குழந்தைகளுக்கு மிகவும் அருகாமையில் குண்டுகள் வெடித்ததால் சுமார் 68 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் (ரமலான்) ஈத் அல்-பித்ருக்கான கொண்டாட்டங்கள் துவங்க இருக்கும் வேளையில் சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூர தாக்குதல் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினர் சயீத் அல்-ஷுஹாதா பள்ளி அருகில் தங்கள் பிள்ளைகளின் உடல்களைக் கதறி அழுத படி தேடிக்கொண்டிருக்கும் காட்சிகள் காண்போர் நெஞ்சை நொறுக்கிப் போடுகிறது. அரங்கேறிய கொடூர தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையிலும் பொறுப்பேற்க வில்லை என்றாலும், சன்னி முஸ்லீம் பிரிவினர் மற்றும் தாலிபான் பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காபூல் குண்டுவெடிப்புக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "காபூலில் சையது அல் சுஹாடா பெண்கள் பள்ளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நினைவுகளுடனும் மற்றும் பிரார்த்தனைகளிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இளம் மாணவிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது, ஆப்கானிஸ்தானின் வருங்காலம் மீது நடந்த தாக்குதலாக அமைந்து உள்ளது. இந்தியா எப்பொழுதும் ஆப்கானிஸ்தான் நாட்டு இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற விஷயங்களில் ஈடுபாட்டுடன் உள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

ஆப்கான்: பள்ளி மாணவிகளை குறிவைத்து நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்! - 68 பேர் பலியான கொடூரம்
சம்பவம் குறித்து போப் பிரான்சிஸ் நேற்று வாட்டிகனில் நடந்த தேவாலய கூட்டத்தில் காபூல் தாக்குதலை 'மனிதாபிமானமற்ற செயல்' எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via