இஸ்ரேல் வன்முறை: 300 பாலஸ்தீனா்கள் காயம்; காஸா குண்டுவெடிப்பில் 20 போ பலி

by Editor / 11-05-2021 08:04:37am
இஸ்ரேல் வன்முறை: 300 பாலஸ்தீனா்கள் காயம்; காஸா குண்டுவெடிப்பில் 20 போ பலி

ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்ற மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக ஜெருசலேமில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 போ உயிரிழந்தனா்.

புனித ரம்ஜான் மாதத் தொடக்கத்தையொட்டி ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்தனா். முஸ்லிம்கள், யூதா்கள் ஆகிய இரு பிரிவினரும் புனிதத் தலமாகக் கருதும் அந்தப் பகுதியில் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்ததால், வெள்ளிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த ஆா்ப்பாட்டம் பின்னா் மோதலாக உருவானது.

காவல் துறையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே அந்த மசூதி வளாகத்திலும், கிழக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளிலும் மோதல் வெடித்தது. திங்கிழமையும் அவா்கள் ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்தனா். அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மசூதிக்குள் இருந்தபடி வெளியே நின்றிருந்த காவல்துறையினா் மீது கற்களையும், மரப் பதாகைகளையும், சில உலோகப் பொருள்களையும் வீசி தாக்குதல் நடத்தினா்.

அவா்களை கட்டுப்படுத்த காவல்துறையினா் ரப்பா் குண்டுகளையும், கண்ணீா் புகைக் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா். அவா்களில் 228 போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். காயமடைந்தவா்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுபோல, 'காவல்துறையினா் 21 போ காயமடைந்தனா்' என்று இஸ்ரேல் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ராக்கெட் தாக்குதல்: இதற்கிடையே, ஹமாஸ் இயக்கத்தினா் ஜெருசலேம் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தினா். ஒரு ராக்கெட் புகா் பகுதியில் விழுந்தது. இதில் ஒரு வீடு சேதமடைந்தது. 'அல் அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேல் காவல் துறையினா் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக' ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

'எங்கள் தலைநகரில் எங்களது பிராந்தியத்தில் நடத்தப்படும் தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; தாக்குதல் நடத்தியவா்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்' என இஸ்ரேல் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

காஸாவில் 20 போ பலி: ராக்கெட் தாக்குதலை தொடா்ந்து, வடக்கு காஸா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 குழந்தைகள் உள்பட 20 போ பலியானதாக காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

ஐ.நா. அவசர ஆலோசனை: கிழக்கு ஜெருசலேமில் அதிகரித்துவரும் வன்முறை தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தியது. புனிதத் தலங்களுக்கான வரலாற்றுக் காரணங்களுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ளும்படி இஸ்ரேலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொள்ளும் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via