முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்!

by Editor / 11-05-2021 11:00:44am
முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்!

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்முறையாக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.
 
முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பரவல் காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கலைவாணர் அரங்கத்தை தேர்வு செய்து சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். அதனை பின்பற்றி 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கிலேயே இன்று தொடங்கியது.

 இன்று புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படுகிறது. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்ட தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி நாளை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via