மலேசியாவில் ஜூன் 7 வரை ஒரு மாதம் பொதுமுடக்கம்: பிரதமர் அறிவிப்பு

by Editor / 11-05-2021 01:16:50pm
மலேசியாவில் ஜூன் 7 வரை ஒரு மாதம் பொதுமுடக்கம்: பிரதமர் அறிவிப்பு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மலேசியா முழுவதும் ஒரு மாத காலம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

வரும் புதன்கிழமை தொடங்கி ஜூன் 7 வரை ஒரு மாதம் மலேசியாவில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும். சமீபத்தில் மலேசியாவில் தினமும் 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,000 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கையும் 1,700 ஆக உயர்ந்துள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகள் தடை செய்யப்படும் என்றும், ஈத் பண்டிகையின்போது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வருகை தரவோ அல்லது குடும்ப கல்லறைகளைப் பார்க்கவோ முடியாது என் று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். மேலும் மழலையர் பள்ளி மற்றும் தினப்பராமரிப்பு நிலையங்கள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும். உணவகங்களில் உணவருந்தும் சேவை அனுமதிக்கப்படாது, தனியார் வாகனங்களில் மூன்று பேருக்கு மேல் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது

மத நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் திறக்கப்படலாம். கடந்த ஆண்டு போலல்லாமல், தற்போது குறைந்த பணியாளர்களுடன் வணிகங்கள் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது ."நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பெரும் தொற்று மிகவும் ஆக்ரோஷமான மற்றும் விமர்சன ரீதியானது என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். நாங்கள் தற்போது வெல்லவில்லை. கடவுள் விரும்பினால் இந்த வைரஸை வெல்வோம்" என்று முஹைதீன் கூறினார்.

மலேசிய அரசாங்கம், தேசிய தடுப்பூசி திட்டத்தை மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தியது என்றும், இதனால் நாட்டில் 33 மில்லியன் மக்களில் 1% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசிகளின் போதிய சப்ளை இல்லாததன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்,

 

Tags :

Share via