இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; கேரள பெண் உள்ளிட்ட 33 பேர் பலி

by Editor / 12-05-2021 08:13:34am
இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; கேரள பெண் உள்ளிட்ட 33 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில், 33 பேர் பலியாயினர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் இறந்ததை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக இஸ்ரேல் கருதப்படுகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. எல்லையில் உள்ள காசா மலைக்குன்று பகுதியில், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும். தற்போது இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட, 24 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்படும், 13 மாடி கட்டடமான காசா டவரை, இஸ்ரேல் தரைமட்டமாக்கியது.இதற்கு பதிலடி தரும்விதமாக, ஹமாஸ் அமைப்பு சுமார் 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவின. இத்தாக்குதலில் வாகனங்கள், வீடுகள், கட்டடங்கள் என பலவும் தீக்கிரையாயின. இதில் 3 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர். பலியான பெண்களில், இந்தியாவை சேர்ந்த நர்ஸ் சவுமியாவும் ஒருவர். இவர், கேரள மாநிலம் இடுக்கி, கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்தவர். தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது, ராக்கெட் தாக்குதலில் அவர் பலியாகினார். இதனை உறுதி செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via