இஸ்ரோவின் வரலாறு

by Editor / 24-07-2019 01:16:47am
இஸ்ரோவின் வரலாறு

சந்திராயன் 2 ஏவப்பட்ட இஸ்ரோவின் அலுவலகம் ஒரு தேவாலயம் என்பது உங்களுக்குத்தெரியுமா??

      1962ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் (நேரு) தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. 

விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சி குழு அமைக்கப்பட்டது.

விக்ரம் சாராபாய் ஒருமுறை சக விஞ்ஞானிகளுடன் தும்பாவிற்கு (தற்போது திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதி ) சென்றார்.அங்கு கடற்கரையோரம் புனித மகதலேன் மரியாள் (Mary's Magdalene Church) தேவாலயம் இருந்தது.அந்தத் தேவாலயத்தின் பிஷப்பை அவர்கள் சந்தித்தனர் . 

இந்தியாவின் முதல் ராக்கெட் அந்தப் பகுதியிலிருந்துதான் ஏவப்பட வேண்டுமென்று விளக்கினார்.

1963 நவம்பர் 21-இல் இருதரப்பும் சம்மதிக்க, அந்தக் கிராம மக்கள் வேறொரு புதிய பகுதிக்கு மாற்றப்பட்டனர். அந்தப் *புதிய பகுதியில் தேவாலயம் ஒன்று எழுப்பப்பட்டது*. இதெல்லாம் நூறே நாட்களில் நடந்தன.பரந்து விரிந்த இந்தியாவில் எவ்வளவோ இடங்கள் இருக்க, தும்பாவை எதற்காக ராக்கெட் ஏவுதளமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

காரணம் இருந்தது. அப்பகுதி நிலநடுக்கோட்டுக்கு அருகிலிருப்பதால் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்றதாக இருக்குமென்பதால் தேர்வு செய்யப்பட்டது. மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமும் அப்போது தும்பாவில் பணிபுரிந்த பொறியாளர்களுள் ஒருவர்.அங்கிருந்த தேவாலயம் அலுவலகமாக மாற்றப்பட்டு விக்ரம் சாராபாய் அதில் பணியாற்ற தொடங்கினார்.

அப்போதுதான் இந்தியாவின் முதல் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி தும்பாவிலிருந்து ஏவப்பட்டது.

அதன் பின்னர், தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவாக இருந்தது 1969ல் நாட்டின் தற்போதைய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவாக உருவெடுத்தது.

இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டபோது, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி.இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் சென்னைக்கு அருகில் ஆந்திராவிலிருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு மாற்றப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்துக்கு அடுத்ததாக மிகச் சிறப்பான இடத்தில் அமைந்துள்ள விண்வெளி நிலையம் என்று கருதப்படுகிறது நமது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையம்.

தொடக்கத்தில் இஸ்ரோ ஏவுதளம்என்றே இது குறிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீஹரிகோட்டா அதி உயர வீச்சு தளம் (Sriharikota High Altitude Range – சுருக்கமாக SHAR)* என்றும் அழைக்கப்பட்டது.

 2002-ம் ஆண்டில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சதீஷ் தவான் (அப்துல் கலாம் அவர்களின் குரு) இறந்த பிறகு அந்த இடம் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் என்று அழைக்கப்படுகிறது.

மொத்தம் 145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும் இந்த மையத்தில் கடற்கரையின் நீளம் 27 கிலோ மீட்டர். இந்திய அரசு இதைத் தேர்வு செய்வதற்கு முன்னால் சவுக்குத் தோப்பாக இது இருந்தது. பருவக் காற்றுகளால் ஓரளவு பாதிக்கப்பட்டாலும், பெரும்பாலும் தெளிவான வெப்பச் சூழலே நிலவுகிறது.

சென்னையிலிருந்து 83 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சூலூர்பேட்டை. அங்கிருந்து புலிகட் ஏரி அருகே சென்றால் இந்தியாவின் விண்வெளி மையத்தை அடையலாம்.

ஸ்ரீஹரிகோட்டா எனும் ஒரு முன்னாள் மீனவ கிராமமும், ஒரு முன்னாள் சவுக்குத் தோப்பும் இந்திய வரைபடத்தில் இவ்வளவு முக்கிய இடத்தை அடைந்ததற்குக் காரணம் என்ன? இதற்கான அறிவியல் காரணங்கள் பல உண்டு.அவற்றில் ஒரு மிக முக்கிய காரணம் அவை கடலுக்கு அருகே இருப்பது.

விண்கலத்தை மேலே எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகள் ஒரு கட்டத்தில் எரிந்துவிடும். அதன் பாகங்களில் சில கீழே விழும். அந்தப் பாகங்களில் சில மீண்டும் பயன்படுத்தக் கூடியவை. அவை நிலத்தில் விழுந்தால் அவற்றுக்குப் பாதிப்புகள் ஏற்படும். கடலில் விழுந்தால் பாதிப்பு இல்லாமல் (அல்லது குறைந்த பாதிப்புகளுடன்) அவற்றைச் சேகரித்துக் கொள்ள முடியும்.

இந்தப் பகுதிகளில் ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் நிலமும் இருப்பதால் அந்தப் பகுதியில் ஒரே ஒரு சாலை மட்டுமேதான் இருக்கும். இதனால் அந்தப் பகுதியின் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த முடிகிறது.

இந்தப் பகுதியில் மிகவும் குறைவான மக்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் உள்ளூர் மீனவர்களாக இருப்பார்கள் அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) ஊழியர்களாக இருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருப்பதால் ஏதாவது விபத்து நேரும்போது பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்வது எளிது.

அதுதவிர மிகவும் கனமான பாகங்களையெல்லாம் அந்நிலப் பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்வது எளிது. முடிந்தவரை நிலநடுக்கோட்டுக்கு அருகே அந்த இடம் இருப்பது நல்லது. பூமியின் சுழற்சியைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது இங்கே பூமி கொள்ளளவு அதிகப்படி விசையைக் கொடுக்கும். எனவே, எரிபொருள் கொஞ்சம் மிச்சமாகும்.

படம் - இஸ்ரோவின் முதல் அலுவலகமாக செயல்பட்டு தற்போதுவரை இஸ்ரோவின் பயன்பாட்டிலிருக்கும் St.Mary's Magdalene Church - தும்பா (திருவனந்தபுரம்)

 இந்தியாவின் முதல் ராக்கெட் இங்கிருந்துதான் ஏவப்பட்டது.

 

Share via