மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு


இந்தியாவையே அதிர வைத்த கற்பழிப்பு சம்பவம் என்றால் அது 2012ஆம் ஆண்டில் டிசம்பர் 16-ந் தேதி இரவு ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவமாகும்.
நிர்பயா தனது நண்பருடன் சினிமாவுக்கு சென்று விட்டு பேருந்திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து அந்த இடத்தில் நின்று அவர்களை பேருந்துக்குள் ஏற்றினார்கள்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து பேருந்தில் டிரைவருடன் சேர்த்து 6 நபர்கள் இருந்தனர் பேருந்து நகர்ந்த சில நிமிடங்களிலேயே நிர்பயாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்கள். அதனைத் தடுக்க முற்பட்ட நண்பனை இரும்பு கம்பியால் தாக்கி மயக்கமடையச் செய்தார்கள்.
அதன் பிறகு நிர்பயாவை ஓடும் பேருந்திலேயே கற்பழித்தனர். பின்னர் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக இருவரையும் தாக்கி பஸ்சில் இருந்து வெளியே வீசிவிட்டு சென்றனர்.
சாலையில் வீசப்பட்ட கிடந்த இவர்களை அந்த வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்
போலீசார் இருவரையும் மீட்டு சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அதனையடுத்து உயர்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 13 நாட்கள் கழித்து டிசம்பர் 29-ந் தேதி நிர்பயா சிகிச்சை பலனின்றி இறந்தார். கற்பழிப்பு குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
டெல்லி போலீசார் பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு சிறார் குற்றவாளி ஆகிய 6 பேரை கைது செய்து கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ராம்சிங் திகார் சிறையில் 2013-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டெல்லி அரசு ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்த கொலை குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.