நாங்க மூணு பேர்! ‘ஆர்வக்கோளாறு’ பட இயக்குநர் சந்திரன் பேட்டி

by Professor / 17-11-2018
நாங்க மூணு பேர்! ‘ஆர்வக்கோளாறு’ பட இயக்குநர் சந்திரன் பேட்டி

என்னோட வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாக்கி எழுதின கதைதான் நான் இயக்கியிருக்கிற ‘ஆர்வக்கோளாறு’ படம் என்கிறார் அறிமுக இயக்குநர் சந்திரன். நான், சுசீந்திரன், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ டைரக்டர் லெனின் பாரதின்னு மூணு பேரும் டைரக்டர் அமுதேஸ்வரன்கிட்ட உதவியாளரா ஒண்ணா வேலை பார்த்தோம். சில காரணங்களால அந்தப் படம் நின்னுப் போச்சு. அதுக்கப்புறம் சுசீந்திரன் பெரிய இயக்குநர் ஆயிட்டாரு. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ மூலமா தன்னை நிரூபிச்சிருக்காரு லெனின் பாரதி. இது என்னோட டர்ன் என்று சொல்லி புன்னகைக்கிறார் சந்திரன்.

ஐந்து நண்பர்கள். தங்களோட நண்பனோட காதலுக்கு பக்க பலமா நிக்கிறாங்க. காதலிச்ச பெண்ணை அழைச்சிட்டு இரவோடு இரவா ஊரை விட்டு கிளம்புறாங்க. மறுநாள் கல்யாணம் நடத்தணும். நண்பனோட காதல் என்னாச்சு, அவனுக்கு உதவப்போன நண்பர்கள் நிலை என்னாங்கிறதுதான் கதை என்று தொடர்ந்தார். இது ‘நாடோடிகள்’ கதையை ஞாபகப்படுத்துற மாதிரி இருக்கே? இருக்கலாம். ‘நாடோடிகள்’ படம் வரும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துச்சு. அந்தப் படத்துலே நடந்த மாதிரியே நிஜத்துலேயும் கல்யாணமாகி அவங்க பிரிஞ்சு போனாங்க. ஆனா கண்டிப்பா ‘நாடோடிகள்’ படத்துக்கும் என் படத்துக்கும் சம்பந்தம் இருக்காது. இதுலே அந்தப் பெண்ணுக்கு கல்யாணமே நடக்காம போனா என்ன ஆகும்கிறதை சொல்லியிருக்கேன். அதோடு இந்த கதையை மேலோட்டமா கேட்கும்போது ‘நாடோடிகள்’ ஞாபகம் வரலாம். ஆனா, திரைக்கதையோட ட்ரீட்மென்ட் மொத்தமாவே வேறு மாதிரியானது. நட்சத்திரங்கள்? இருபது வருஷமா சினிமாவில் இருக்கேன். பல படங்களில் உதவி இயக்குநரா ஒர்க் பண்ணினேன். என்கூடவே பல வருஷமா டிராவல் ஆனவர்தான் அபிஷேக். அவரை வச்சு படம் பண்ணுவேன்னு நினைச்சும் பார்க்கல. ஆனா எல்லாத்துக்கும் தயாரானார். உடல் எடையைக் குறைச்சி, ஹீரோவுக்கான லுக்குக்கு மாறினார். பிரீத்தி டயானா டிவி சீரியல்கள்ல நடிச்சிருக்காங்க. இதுல ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. ராஜன், மார்ட்டின் ஜெயராஜ், ஜெகதீஷ், சக்தி, சங்கர்னு ஐந்து பேர் நண்பர்கள் கேரக்டர்களில் வர்றாங்க. சென்னையில நடந்த சம்பவத்தை கும்பகோணத்துல படமாக்கி இருக்கீங்களே? ஆமாம். கும்பகோணம்னாலும் அங்கே சிட்டியிலதான் படமாக்கினேன். அதனால இது சிட்டி கதைதான். படத்துல 60 சதவீத காட்சிகள் இரவுலேதான் நடக்கும். படத்துல எந்தக் காட்சியுமே ஆபாசமாகவோ டபுள் மீனிங் வசனத்தோடவோ இருக்காது. இந்த படத்தை ஷம்சுதீன் தயாரிச்சிருக்கார். அவர் எனக்கு அண்ணனைப் போல. நான் இணை இயக்குனரா ஒர்க் பண்ணணும்கிறதுக்காகவே 2012ல சப்தம் அப்படிங்கிற பெயர்ல ஒரு படம் தயாரிச்சார். இப்போ நான் டைரக்டர் ஆகணும்கிறதுக்காக ஆர்வக்கோளாறு தயாரிச்சிருக்கார். ஆனா கண்டிப்பா இது அவரோட ஆர்வக்கோளாறு கிடையாது. அவரோட ஹண்ட்ரெட் பெர்சன்ட் அன்பு மட்டுமே காரணம். சிலாகித்து சொல்கிறார் சந்திரன்

Share via