பில்லா பாண்டி - விமர்சனம்

by Admin / 17-11-2018
பில்லா பாண்டி - விமர்சனம்

நடிப்பு: ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, கே.சி.பிரபாத், தம்பி ராமய்யா, மாரிமுத்து, சங்கிலி முருகன், அமுதவாணன். ஒளிப்பதிவு: ஜீவன். இசை: இளையவன். தயாரிப்பு: ஜே.கே. பிலிம் புரொடக்‌ஷன்ஸ். இயக்கம்: ராஜ்சேதுபதி

பில்லா பாண்டி - விமர்சனம்

மதுரையில் பாட்டி கண்காணிப்பில் வளரும் ஆர்.கே.சுரேஷ், அஜீத் குமாரின் வெறித்தனமான ரசிகர். அஜீத் நடித்த பில்லா படம் வெளியான பிறகு, பெயரை, பில்லா பாண்டி என மாற்றிக் கொள்கிறார். ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்துகொண்டே கட்டிடம் கட்டுகின்ற வேலை பார்க்கும் சுரேஷ் மீது, அவரது முறைப்பெண் சாந்தினி பைத்தியமாக இருக்கிறார். ‘கட்டினா... என் மாமனைத்தான் கட்டுவேன்’ என்று ஒத்தைக்காலில் தவம் செய்கிறார். சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்காமல், எல்லாவற்றையும் ரசிகர் மன்றத்துக்காக செலவு செய்யும் ஊதாரி மாப்பிள்ளைக்கு சாந்தினியை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறார், தந்தை மாரிமுத்து. இந்த நிலையில் சுரேஷ், சங்கிலி முருகனின் வீட்டை தனி கான்டிராக்ட் எடுத்து கட்டுகிறார். அப்போது சுரேஷின் அறிமுகம் ஏற்பட்டு, இந்துஜா அவரை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்த பிறகும் சாந்தினியை பெரிதும் விரும்பும் சுரேஷ், இந்துஜாவை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்துஜாவுக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்கின்றனர். திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், சுரேஷை தான் காதலிக்கும் விஷயத்தை, தந்தை முன்னிலையில் சொல்கிறார் இந்துஜா. இதற்கு கடுமையான எதிர்ப்பு வருகிறது. இதற்கிடையே, கார் விபத்து ஒன்றில் இந்துஜாவின் குடும்பத்தினர் மரணம் அடைகின்றனர். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட இந்துஜாவை தன்னுடைய மேற்பார்வையில் கண்காணிக்கக் கூடிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் சுரேஷ், இறுதியில் சாந்தினியை திருமணம் செய்தாரா? இந்துஜாவின் நிலை என்ன ஆனது என்பது கதை. அஜீத்தின் தீவிர ரசிகராக வந்து, திரையில் செம ஆட்டம் போட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். சாந்தினியின் காதலால் அசடு வழிவது, இந்துஜாவுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு மனம் பதறுவது, வில்லன்களை போட்டு பொளப்பது என, தன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். மாமனுக்காக உருகும் சாந்தினியும், மனநிலை பாதிப்பில் குழந்தையைப் போல் மாறிவிடும் இந்துஜாவும் நன்கு நடித்திருக்கின்றனர். கே.சி.பிரபாத்தின் வில்லத்தனமும், மாரிமுத்துவின் குணச்சித்திரமும் மனதில் நிற்கிறது. மதுரை பின்புலத்தில் கதையை இயக்கியுள்ளார், நடிகர் ராஜ் சேதுபதி. இயக்குனர் ஜீவன் ஒளிப்பதிவு பற்றியும், இளையவனின் இசை பற்றியும் குறிப்பிட்டு சொல்கின்ற அளவுக்கு இன்னும் அவர்கள் கவனம் செலுத்தியிருக்கலாம். தல பாடல், ரசிக்கலாம். பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையாத இந்துஜா, வீட்டில் சாதாரணமாக தலையில் இடித்துக்கொண்டதுமே பழைய நினைவுகளை திரும்ப பெறுவது என்பது, இந்த காலத்திலுமா இப்படி காமெடியாக யோசிக்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கட்டிட வேலை செய்கின்ற பெண்களை தம்பி ராமய்யா டபுள் மீனிங்கில் கலாய்ப்பது, நல்ல காமெடி இல்லை.