களவாணி மாப்பிள்ளை - விமர்சனம்

by Professor / 17-11-2018
களவாணி மாப்பிள்ளை - விமர்சனம்

நடிப்பு: தினேஷ், அதிதி மேனன், தேவயானி, ஆனந்தராஜ், சாம்ஸ், முனீஸ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன். ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு. இசை: என்.ஆர்.ரகுநந்தன். தயாரிப்பு: ராஜபுஷ்பா பிக்சர்ஸ். இயக்கம்: காந்தி மணிவாசகம்

ஒரே செல்லப்பிள்ளை தினேஷுக்கு ‘வாகனத்தில் கண்டம்’ என்று ஜோதிடர் சொல்ல, எந்த வாகனத்தையும் ஓட்ட சொல்லி தராமலேயே வளர்க்கிறார் அம்மா ரேணுகா. பணக்கார வீட்டு தேவயானியின் மகள் அதிதி மேனனை காதலிக்கிறார், தினேஷ். கார் ஓட்ட தெரியும் என்று பொய் சொல்லி திருமணம் செய்ததால், தாலி கட்டிய கணவன் ஆனந்தராஜையே ஒதுக்கி வைத்தவர் தேவயானி. இந்நிலையில், கார் ஓட்டவே தெரியாத தினேஷ், எப்படி களவாணித்தனம் செய்து தேவயானியின் மாப்பிள்ளை ஆகிறார் என்பது கதை. 1980களில் வெளியான சில காமெடி படங்களின் சாயலில் நூல்பிடித்து, அதில் சின்னச்சின்ன கலாட்டாக்களை சேர்த்து, முழுநீள காமெடி படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் காந்தி மணிவாசகம். தினேஷ் எந்த மெனக்கெடலும் இல்லாமல், இயக்குனர் சொன்னதை அப்படியே செய்துவிட்டு ஒதுங்கி நிற்கிறார். காதல் காட்சிகளில் ஓரளவு கவனிக்க வைக்கிறார். அதிதி மேனன் அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சித்துள்ளார் என்றாலும், கடைசிவரை அவரை ஆடவும், பாடவும் மட்டுமே விட்டுள்ளனர். முனீஸ்காந்த், சாம்ஸ், ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் கூட்டணி சிரிக்க வைக்க நிறைய உழைத்துள்ளனர் என்றாலும், அந்த உழைப்பு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. ஓவர் மேக்கப்பில், பணக்கார திமிர் காட்டியுள்ளார் தேவயானி. நடிப்பில் தெரியும் செயற்கைத் தனத்தை குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவை பளிச்சென்று செய்திருக்கிறார், சரவணன் அபிமன்யு. என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை ஓரளவு தாங்கிப் பிடித்திருக்கிறது. அதிதி மேனை பார்க்க, அவர் இருக்கும் வீட்டின் சுவரேறி குதிக்கிறார் தினேஷ். போன இடத்தில் உட்கார்ந்து கண் மூடுகிறார். அவர் தூங்குவதாக நினைத்துக்கொண்டு, அதிதி மேனன் அவரருகில் உட்கார்ந்து கொஞ்சுகிறார். பிறகு செல்ஃபி எடுக்கிறார். அங்கிருந்து கிளம்பும்போது, தினேஷ் அவர் கையை பிடித்து இழுக்கிறார். டூயட் ஆரம்பிக்கிறது. இப்படி படம் முழுக்க கற்பனை வறட்சி காட்சிகள் பல. மனோபாலாவின் இலவச கால்நடை மருத்துவ முகாம் எபிசோடில், விரசம் நிரம்பி வழிகிறது. ஒரு இளைஞன் நினைத்தால், சில நாட்களில் காரோட்ட கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய போராட்டம் என்ற லாஜிக் கேள்வி எழுகிறது. திரைக்கதை மற்றும் காட்சிகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி இருந்தால், காமெடி மாப்பிள்ளையாக கவனிக்கப்பட்டு இருப்பார்.

Share via