தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் - விமர்சனம்

by Staff / 17-11-2018
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் - விமர்சனம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் கால்பதித்து, இங்குள்ள மன்னர்களை தங்களின் தந்திரத்தாலும்,...

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் கால்பதித்து, இங்குள்ள மன்னர்களை தங்களின் தந்திரத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் வீழ்த்தி, ஆட்சி மற்றும் அதிகாரங்களை கைப்பற்றிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதை. சரித்திர கதையில் கற்பனையை கலந்து, பிரமாண்டமான பேன்டஸி படமாக, தயாரித்து இருக்கின்றனர். 1795களில் நடக்கின்ற கதை. வெள்ளைக்கார தளபதி ஜான் கிளைவ் (லாயிட் ஓவன்), ரோனக்பூர் மன்னர் மிஸ்ரா சிக்கந்தரை தந்திரத்தால் வீழ்த்தி, அவருடைய ராஜ்ஜியத்தையும், கோட்டையையும் கைப்பற்றுகிறார். அதுமட்டுமின்றி, மன்னருடைய குடும்பத்தையும் அழிக்கிறார். ஆங்கிலயேர்களை எதிர்த்து கொரில்லா முறையில் போர் நடத்தும் மாவீரன் ஆசாத் (அமிதாப்பச்சன்), மன்னருடைய மகள் சபீரா பெய்க்கை (பாத்திமா சனா ஷேக்) காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவரை தன் கூட்டத்தில் இணைத்து, மிகச் சிறந்த போராளியாக உருவாக்குகிறார். பாத்திமா சனா ஷேக்கும் இழந்த தன் ராஜ்ஜியத்தை மீட்க தகுந்த நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். சின்னச்சின்ன திருட்டு, ஜாலியான வாழ்க்கை என்று, நாடோடி வாழ்க்கை வாழ்பவர் பிராங்கி மல்லா (ஆமிர்கான்). வீரத்திலும், விவேகத்திலும் சிறந்தவர். தலைமறைவாக இருக்கும் அமிதாப்பச்சனை பிடிக்க, ஆங்கிலேயேர்கள் ஆமிர்கானை தேர்வு செய்கின்றனர். ஆங்கிலம் பேச வேண்டும், இங்கிலாந்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆமிர்கான், அவர்களின் சதி திட்டத்துக்கு சம்மதிக்கிறார். இக்கட்டான சந்தர்ப்பத்தில் அமிதாப் பச்சனை சந்திக்கிறார், ஆமிர்கான். அவருக்காக வாளெடுத்து சண்டை போடுகிறார். ஆமிர்கானின் வீரத்தை பார்த்த அமிதாப்பச்சன், அவரை தன் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். கூட்டத்தில் இருந்துகொண்டே அமிதாப்பச்சனை ஆங்கிலேயர்களுக்கு காட்டிக் கொடுக்க திட்டம் தீட்டுகிறார், ஆமிர்கான். ஆனால், பாத்திமா சனா ஷேக்கின் அழகு, வீரம், அமிதாப்பச்சனின் விடுதலை உணர்வு அவரை மாற்றிவிடுகிறது. பிறகு தங்கள் வீரத்தாலும், சமயோசித புத்தியாலும் ஆங்கிலேயர்களை அமிதாப்பச்சனும், ஆமிர்கானும் எப்படி வீழ்த்துகின்றனர் என்பது மீதி கதை. ஆஜானுபாகுவான ேதாற்றம், ஆக்‌ரோஷ சண்டை, சுதந்திர வேட்கை என, அமிதாப்பச்சன் படம் முழுக்க சிங்கம் போல் கர்ஜிக்கிறார். இந்த வயதிலும் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுகிறார். ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ஹீரோ ஜானி டெஃப்பை நகல் எடுத்து நடித்துஇருக்கிறார், ஆமிர்கான். அவர் அணிந்துள்ள ஆடைகள் கூட ஜானி டெஃப்பின் ஸ்டைலிலேயே இருக்கிறது. நல்லவனா? கெட்டவனா என்று யூகிக்க முடியாத கேரக்டர். எவ்வளவு பெரிய விஷயத்தையும் விளையாட்டாக செய்து முடிக்கும் தந்திரம் என, அச்சு அசலாாக ஜானி டெஃப்தான். நண்பனுடன் செய்யும் கலாட்டா, ஹீரோயினை சீண்டி பார்ப்பது, வெள்ளைக்காரர்களிடமே குள்ளநரி போல் தந்திர வேலைகள் செய்வது என, படம் முழுக்க ஜாலியாக வலம் வருகிறார். மன்னர் குலத்துக்குரிய பேரழகுடன் இருக்கும் பாத்திமா சனா ஷேக், அப்படியே பறந்தும், பாய்ந்தும் சண்டை போட்டு அசத்தியிருக்கிறார். தன்னுடைய நாட்டை மீட்க வேண்டும், ஒட்டுமொத்த குடும்பத்தை அழித்தவனை பழிவாங்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்கிறார். ஆமிர்கான் மீது வரும் காதலை, தேசத்துக்காக மனதிற்குள் வைத்து மறைத்துக் கொள்கிறார். கேத்ரினா கைஃப்புக்கு குத்தாட்டம் போடுவதை தவிர வேறு வேலையில்லை. எனினும், ஆட்டத்தை அவர் பலமாகவே ஆடியிருக்கிறார். மனுஷ்நந்தன் ஒளிப்பதிவும், ஜான் ஸ்டாவர் எதுரி பின்னணி இசையும் ஹாலிவுட் தரத்துக்கு இருக்கிறது. உணர்ச்சி மிகுந்த விடுதலை போராட்ட படமாக கொடுப்பதா? ஜாலியான பேன்டஸி படமாக தருவதா என்பதில் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா நிறையவே குழம்பி இருக்கிறார். லாஜிக் மீறிய சூப்பர் ஹீரோயிச காட்சிகள், படத்துடன் ஒன்றவிடாமல் செய்கிறது. பாகுபலி ரேஞ்சுக்கு படம் கொடுக்க முயற்சித்து இருக்கின்றனர். ஆனால், வலுவில்லாத கதையின் காரணமாக அந்த முயற்சி உரிய பலன் அளிக்கவில்லை.

Share via