குழப்பம் தீருமா?

by Admin / 28-12-2019
குழப்பம் தீருமா?

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது.

குழப்பம் தீருமா?

இலங்கையின் பொருளாதார கொள்கைகள், அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி ஆகியவற்றில் இருவரும் முரண்பட்டு நின்றனர். இதன் விளைவாக பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா அறிவித்தார். இலங்கை அரசியல் குழப்பத்திற்கு இச்சம்பவம் பிள்ளையார் சுழி இட்டது. ராஜபக்சே மெஜாரிட்டியை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டபோது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதற்கு இலங்கையில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் இலங்கை நாடாளுமன்றம் சட்ட விரோதமாக கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக ரனில் விக்ரமசிங்கே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். அவரது ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதற்காக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது. அதிபர் சிறிசேனாவின் தன்னிச்சையான முடிவுகள் தோல்வியை தழுவி விட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், உச்சநீதிமன்றத்திலும் நாடாளுமன்றம் கலைப்புக்கு உரிய நியாயம் கிடைக்குமா என சட்டவல்லுனர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இலங்கையின் அதிபரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருக்கும் சூழலில், உச்சநீதிமன்றமும் அவரது முடிவுக்கு சாதகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

இலங்கையின் 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் அதிபருக்குரிய அதிகாரங்கள் எல்லையற்று காணப்படுகின்றன. எனவே நாடாளுமன்ற தேர்தலை இலங்கை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திலேயே இருப்பதாக சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் நாளுக்கு நாள் நடக்கும் அதிரடி திருப்பங்களில் நேற்று இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக உள்ள ராஜபக்சே தனது ஆதரவாளர்களான 50 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோடு அக்கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சின்னம் தொடர்பாக சிறிசேனாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ராஜபக்சே கட்சியை விட்டு விலகியுள்ளார். இந்த முடிவு அதிபர் சிறிசேனாவுக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு நாள்தோறும் திருப்பங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு மற்றும் அரசியல் குழப்பங்களை அதன் உள்நாட்டு விவகாரம் என இந்தியா கடந்து போய்விட முடியாது. இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் இவ்விஷயத்தில் இரண்டற கலந்திருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, நிம்மதியாக இருந்திடும் வகையில் ஒரு நல்லாட்சி தேவை. தமிழர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கிடுவதற்கு அரசியல் சட்ட திருத்த பணிகளும் தற்போது தடைப்பட்டு நிற்கின்றன. வரும் நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில், இலங்கை பிரச்னையை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளின் எதிர்பார்ப்பாகும்.

Share via