நான் தமிழ்நாட்டுப் பொண்ணு! ஹன்சிகா சத்தியம் செய்கிறார்

by Professor / 17-11-2018
நான் தமிழ்நாட்டுப் பொண்ணு! ஹன்சிகா சத்தியம் செய்கிறார்

சின்ன குஷ்பூவாக கொழுக்மொழுக் உடல்வாகில் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் சிம்ரனாக மாறியிருக்கிறார். கணிசமாக எடை குறைத்து சைஸ் ஜீரோவாக ஆடிக்காத்தில் பறக்கும் பட்டம் மாதிரி ஒல்லியாகி இருக்கிறார். இந்த சாதனையில் ஹன்சிகாவுக்கு மட்டுமல்ல. நடிகரும், டாக்டருமான சேதுவுக்கும் பங்குண்டு. அவர்தான் குண்டானவர்கள் ஆபரேஷன் இல்லாமலேயே ஒல்லியாகும் ‘ஸ்கூல் ஸ்கல்ப்ட்டிங்’ என்கிற மருத்துவ முறை மூலமாக இவரை இலியானா ரேஞ்சுக்கு மாற்றியவர். ஹன்சிகாவை ஏழு நட்சத்திர ஓட்டலின் பிசினஸ் ஹாலில் சந்தித்தோம்.

என்ன திடீர்னு இப்படி ஆயிட்டீங்க. தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தாதானே பிடிக்கும்?” அட.. நீங்க வேற ப்ரோ. ஃபேஸ்புக்கெல்லாம் பார்க்குறீங்களா இல்லையா? என்னை வெச்சி எவ்ளோ மீம்ஸ் கிரியேட் பண்ணி இருக்காங்க தெரியுமா? கொஞ்சம் சதை போட்டிருந்தோம்னா பப்ளிமாஸ்னு நக்கல் அடிக்கிறாங்க. உடம்பைக் குறைச்சோம்னா, ‘ஏன் இப்படி ஆயிட்டீங்க?’ன்னு உங்களை மாதிரி கேட்குறாங்க. நான் எப்படி இருக்கணும்னு நீங்கள்லாம் எதிர்ப்பார்க்குறீங்கன்னே தெரியலை. உடம்பைதான் குறைச்சிருக்கேன். கன்னமெல்லாம் அதே பழைய ஹன்சிகாவுக்கு இருக்கிறமாதிரி பம்முன்னு பூரிப்பாதான் இருக்கு”. “எத்தனை கிலோ குறைச்சிருக்கீங்க?” “கொஞ்சம் விட்டா என்னோட மெடிக்கல் ஹிஸ்டரியெல்லாம் கேட்டு நோண்டுவீங்க போலிருக்கே? அரண்மனை ரகசியம் மாதிரி இது ஹன்சிகா ரகசியம். எப்படி குறைச்சேன், எவ்வளவு செலவாச்சுன்னுலாம் சொல்ல மாட்டேன். டாக்டர் மோனா மோத்வானிங்கிற டாக்டருக்கும் என்னோட சாதனையிலே பங்கிருக்கு. அவங்கதான் என்னோட எடையை தினம் தினம் கண்காணிச்சி எடைகுறைப்புலே சக்சஸ்ஃபுல்லா என்னை மாத்தினவங்க. வேற யாருமில்லை. என்னோட அம்மாதான்”. “இப்போவெல்லாம் ஒரு ஹீரோயின் 30 படம் நடிச்சாலே மகத்தான சாதனை. நீங்க 50வது படத்தை எட்டிட்டீங்க...” “கணக்கு வழக்கு இல்லாமே நடிச்சிட்டேன். எங்கம்மாதான் 50வது படம் பண்ணுறேன்னு ஞாபகப்படுத்தினாங்க. இப்போ நான் ஒப்பந்தம் ஆகியிருக்கிற ‘மகா’தான் என்னோட ஐம்பதாவது படம். கிரைம் திரில்லர் ஜானர். நான் ஹீரோயின் ஓரியன்டட் மூவி பண்ணுறதில்லைன்னு நீங்கள்லாம் சொல்லிக்கிட்டே இருப்பீங்க. என்னோட 50வது படம் அப்படி அமைஞ்சது ரொம்ப சந்தோஷம். படத்தோட ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் சார், அவரோட ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவிச்சி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. டைரக்டர் லக்‌ஷ்மணனின் உதவியாளரா இருந்த யூ.ஆர்.ஜமீல்தான் இயக்குகிறார். ஏற்கனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’னு நாங்க சேர்ந்து வேலை பார்த்தவங்க என்பதால் ‘மகா’ செய்யுறது ரொம்ப ஈஸியா இருக்கு. படத்தோட புரமோஷனில் ‘ஹன்சிகாவின் 50வது படம்’னு லோகோவெல்லாம் போடப்போறாங்களாம். எனக்கு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு”. “விக்ரம் பிரபுவோட ‘துப்பாக்கி முனை’ செஞ்சிருக்கீங்களே?” “ஆமாம். ‘மகா’வுக்கு முன்னாடி இதுதான் ரிலீஸ் ஆகும். எனக்கும் சரி, விக்ரம் பிரபு சாருக்கும் சரி. ‘துப்பாக்கி முனை’, திருப்புமுனையா இருக்கும். விக்ரம் பிரபு, இதுலே வயசுக்கு மீறின கேரக்டர் பண்ணுறார். இதுவும் கிரைம் திரில்லர்தான். படம் பாருங்க. ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும். படத்துலே கிளாமர் உண்டு. ஆனா, அளவோட இருக்கும். எந்தளவுக்கு கிளாமர் பண்ணினா ஆடியன்ஸ் ரசிப்பாங்களோ, அந்த எல்லையில் நான் நின்னுடுவேன். இத்தனை வருஷ அனுபவத்துலே அந்த லிமிட் என்னங்கிறதை நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்”. “தமிழில் முன்னே மாதிரி அதிகமா பார்க்க முடியலையே?” “போன வருஷம் தெலுங்கு, மலையாளம்னு கமிட் ஆகியிருந்தேன். மலையாளத்துலே முதல் படமே மோகன்லால், விஷால், மஞ்சுவாரியார்னு பெரிய ஆட்களோட பண்ண படமா அமைஞ்சது ரொம்ப சந்தோஷம். ‘வில்லன்’ என்கிற அந்தப் படம் மலையாள சினிமாவில் நிறைய சாதனைகளை செய்தது. முன்னாடி தமிழில் வருஷத்துக்கு அஞ்சு, ஆறு படமெல்லாம் செஞ்சிருக்கேன். இப்போ கொஞ்சம் வேகத்தை நானே விரும்பிதான் குறைச்சிட்டேன். இவ்வளவு படம் பண்ணியபிறகு இனிமே செலக்டட்டாதான் பண்ணணும்னு தோணுச்சி. திரும்பத் திரும்ப கமர்ஷியல் டெம்ப்ளேட்டிலேயே வண்டி ஓட்டுறது எனக்கும் சலிக்கதானே செய்யும்? ‘அரண்மனை’ படத்துலே எனக்கு கிடைச்ச பேருதான் இதுமாதிரி சிந்திக்க வெச்சது. ஒரு வெற்றிப் படத்தில் நாம இருக்கிறோம் என்பதைவிட, அந்த வெற்றிக்கு நாமளும் காரணமா இருக்கோம் என்பதுதான் நம்மோட வெற்றி. அதுக்குள்ளே எனக்கு மார்க்கெட் போயிடிச்சி, ரசிகர்களிடம் மவுசு போயிடிச்சின்னுலாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.இந்த வருஷத் தொடக்கத்தில் ‘குலேபகாவலி’ ரிலீஸ் ஆகியிருக்கு. அப்புறம் ‘துப்பாக்கி முனை’, ‘100’, ‘மகா’ன்னு பிஸியாதான் இருக்கேன். பத்து வருஷமா என்னோட கேரியரை பார்த்தீங்கன்னா 3, 4 மாசத்துக்கு ஒரு படம்னு தொடர்ச்சியா வந்துக்கிட்டுதான் இருக்கு”. “ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்கதான் டாப் ஹீரோக்களோட சாய்ஸா இருந்தீங்க. இப்போ புதுமுகங்கள், அப்கமிங் ஹீரோக்களோடு எல்லாம் நடிக்கிறீங்க...” “எப்பவுமே நான் என் கூட நடிக்கிற ஹீரோக்களைப் பத்தி யோசிச்சதே இல்லை. எனக்குப் பிடிச்ச ஹீரோன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லைன்னாலும் என் மனசுக்கு நேர்மையா முழுமையான ஈடுபாட்டோடுதான் நடிப்பேன். பெரிய ஹீரோக்களேகூட எங்கிட்டே சொல்லியிருக்காங்க, ‘எப்பவுமே ஸ்க்ரிப்ட்தான் ஹீரோ’ன்னு. தமிழில் இப்போ இயக்குநர்களின் காலம். ‘மான் கராத்தே’ சைன் பண்ணுறப்போ சிவகார்த்திகேயன், அப்கமிங் ஹீரோதான். இன்னைக்கு எப்படி இருக்காரு? அப்போ என் டேபிளில் நாலு ஸ்க்ரிப்ட் இருந்தது. நான் ‘மான் கராத்தே’வைதான் ஓக்கே பண்ணினேன்”. “மும்பையிலே அரண்மனை மாதிரி வீடு கட்டுறீங்களாமே?” “இந்த நியூஸெல்லாம் எப்படி உங்களுக்கு வருது? ‘அரண்மனை’ படத்துலே நடிச்சதாலே அரண்மனை மாதிரி வீடு கட்டுறீங்களான்னு இண்டஸ்ட்ரியிலேயே நிறைய பேர் என்னைக் கேட்குறாங்க. எனக்கு ஹிஸ்டரி மேலே எப்பவுமே ரொம்ப ஈடுபாடு உண்டு. அதனாலேதான் புதுவீட்டை அரண்மனை மாதிரி டெக்கரேஷனில் டிசைன் செஞ்சிருக்கோம். கிரகப் பிரவேசத்துக்கு நீங்கள்லாம் வந்து வாழ்த்தணும் அண்ணா”. “உங்க அரண்மனையில் இளவரசியாவே எவ்வளவு நாள் இருப்பீங்க? சுயம்வரம் எப்போ?” “இப்போதைக்கு எங்க அரண்மனையில் எங்க அம்மாதான் ராணி. என்னோட தம்பி இளவரசன், நான் இளவரசி”. “நான் கேட்குறது புரியுதா?” “சூசகமா ‘எப்போ எனக்கு கல்யாணம்?’னு கேட்குறீங்க. நல்ல இளவரசன் அமையட்டும். கல்யாணத்துக்கு அழைப்பிதழை புறா மூலம் தூது அனுப்பறேன். படை பரிவாரங்களோடு வந்து சேர்ந்து வாழ்த்துங்க”. “பாலிவுட்டில் சைல்ட் ஆர்ட்டிஸ்டா இருந்து ஹீரோயின் ஆனீங்க. இப்போ தென்னிந்தியாவுக்கே உங்களை அர்ப்பணிச்சிட்டீங்க. பாலிவுட் மேலே ஏன் கோபம்?” “கோபம்லாம் இல்லை. நார்த்தைவிட சவுத் ரொம்ப பிடிச்சிருக்கு என்பதுதான் காரணம். அதிலும் குறிப்பா சென்னை. என்னை ‘தமிழ்நாட்டுப் பொண்ணு’ன்னு டைட்டில் போட்டு, இந்தப் பேட்டியை பிரசுரம் பண்ணினீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்”. “டைட்டிலெல்லாம் போடுறோம். தமிழ்நாட்டுப் பொண்ணுன்னு சொல்லிக்கறீங்க. ஆனா, உங்களுக்கு இன்னும் தமிழ் சரியா பேசவரலையே?” “கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி. அவ்வளவு ஈஸியா பேசிடமுடியுமா? கொஞ்சம் கொஞ்சமா உச்சரிப்புகளை கத்துக்கிட்டு வர்றேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் விளையாட்டா கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லிக் கொடுத்துடறாங்க. அந்த மாதிரி மங்குனி பாண்டியன்களிடம் வேற உஷாரா இருக்க வேண்டியிருக்கு. அதுவுமில்லாமே திராவிட மொழிகளின் சிறப்பா ஒருமை, பன்மை அமைஞ்சிருக்கு. யாராவது பெரியவங்களை ஒருமையில் பேசிட்டு அப்புறம் வருத்தப் படறேன். நான் இப்பவே தமிழ் பேசுவேன். ஆனா, ஒழுங்கான தமிழ் பேசணும்னுதான் விரும்பறேன். அதனாலேதான் இவ்வளவு தமிழில் பேச இவ்வளவு டயம் எடுத்துக்கறேன்”. “தென்னிந்திய சினிமாவில் உங்களுக்கு நெருங்கிய தோழி யார்?” “ஸ்ரீரெட்டி”. “என்னாது ஸ்ரீரெட்டியா?” “தேவுடா. ஸ்ரேயா ரெட்டின்னு சொல்ல வந்தேன். அவசரத்துலே ஸ்ரீரெட்டின்னு சொல்லிட்டேன். பாருங்க பேரு உச்சரிக்கறப்பவே தடுமாறுறேன். என்னை ‘பராசக்தி’ சிவாஜி சார் மாதிரி தமிழில் பேச சொன்னீங்கன்னா, என்னத்துக்கு ஆவேன்?” “நீங்க அரசியல் படிப்பில் பட்டம் வாங்கினவங்க. எப்போ அரசியலில் குதிக்கப் போறீங்க?” “அண்ணே! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம். ஓக்கேவா? விளையாட்டு போதும். நான் படிச்சதெல்லாம் மறந்துடிச்சி. இப்பவே அம்மா கிட்டே பாக்கெட் மணி வாங்கி செலவு பண்ணுற எளியப் பொண்ணு நான். ஒரு கார், ஒரு டிரைவர், ஒரு உதவியாளர், ஷூட்டிங், வீடு, என்னோட வளர்ப்புக் குழந்தைகள், ஓவியம்.. இவ்ளோதான் என் வாழ்க்கை. இந்த சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. கடவுள் மனசு வெச்சா, அடுத்த ஜென்மத்தில் அரசியல்வாதியா பொறந்து உங்களை ஆளுவேன்”.

Share via