உயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை! த்ரில்லிங்காக சொல்கிறார் கதிர்

by Professor / 17-11-2018
உயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை! த்ரில்லிங்காக சொல்கிறார் கதிர்

மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாகப் பதிய வைத்தவர். சமீபத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்ஷனில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். தனது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்த பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உயிர் பயத்தோடு நடுரோட்டில் அமர்ந்த கதை! த்ரில்லிங்காக சொல்கிறார் கதிர்

பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் வாய்ப்பு எப்படி கிடைத்தது? சில படங்கள் நம்மைத் தேடி வரும். சில படங்களை நாம்தான் தேடிச் செல்லவேண்டும். கவுரவமெல்லாம் பார்க்காமல் அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நான் தேடிப் போய் வாங்கிய வாய்ப்புதான் பரியேறும் பெருமாள் பட வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரைத் தேடிப்போய் சந்தித்தேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் எனப்பட்டது. இந்தப் படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருந்தது. அது ஃபிரெஷ்ஷாகத் தோன்றியது. அதனாலேயே இந்தப் படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த முடிந்தது. படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது? திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில்தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது, குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளைப் படமாக்குவோம். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா? அந்த நடைதான் எனக்கான ஓய்வு நேரம். இதுவாவது பரவாயில்லை. மொட்டை வெயிலில் பொட்டல் வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தைத் தேடிப் போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என பல சமயங்களில் உட்கார்ந்து விடுவேன். என்னுடன் நடித்த கருப்பி நாய், வேட்டை நாய் ரகம். பார்க்க படுபயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதில் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் எனத் தெரிந்து, ஆக்‌ஷன், கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்கப் பழகிவிட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டு போடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கட்டு போட்டுக்கொண்ட பிறகே என்னால் நடக்கவே முடிந்தது. இருபுறமும் வாகனங்கள் பறக்க நடுரோட்டில் நிற்கும் காட்சியில் உயிர் பயம் எட்டிப்பார்த்ததா? அது கதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய காட்சி. அதற்காக இரண்டு பக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல அந்தக் காட்சியைப் படமாக்கினார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட்ட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும். எப்படி அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சி யில் நடிக்கவே மாட்டேன். சினிமாவில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதா? என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான். ஆனால் கதை என்பதையும் தாண்டி மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி இங்கு தேவைப்படுகிறது. என்னைப் போன்றவர்களுக்காவது பரியேறும் பெருமாள் மாதிரி ஏதோ ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. இதுகூட கிடைக்காமல் கஷ்டப்படும் திறமையாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா? உங்கள் படத்தேர்வு பாணி எப்படி இருக்கும்? வழக்கமான ஃபார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப் போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்து படம்தான் பண்றோம். ஏதோ ஒருவிதத்துல புதிதாகப் பண்ணணும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப் படம் ரிலீசான பின்னாடி அப்படியே மறந்து போய்விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தைப் பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளைத் தேர்வு செய்கிறேன். அடுத்த படமும் இதே மாதிரி வித்தியாசமாதான் பண்ணுறீங்கன்னு சொன்னாங்க...ஆமாம். சிகை. கதைக்களம் வித்தியாசமா இருக்கும். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும். அது படத்தைப் பற்றியும், என்னைப்பற்றியும் நிறைய நாள் பேசவைக்கும். இதுதவிர, தற்போது குமரன் என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறேன். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் உங்களுக்கு ஓக்கேவா? சிம்புவே இப்போ நாலு ஹீரோக்களில் ஒருத்தரா நடிக்கிறார். அப்படியிருக்க ஹீரோவா மட்டும்தான் பண்ணுவேன் என்று நான் அடம்பிடிச்சா நல்லாவா இருக்கும். விக்ரம் வேதாவுல டபுள் ஹீரோவில் ஒருத்தராதான் விஜய்சேதுபதி செஞ்சாரு. ஆனாலும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தலையா? அதுமாதிரி கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன்க் குணச்சித்திர வேடத்திலும் கூட நடிக்கத் தயங்கமாட்டேன்.