குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

by Editor / 20-04-2021 07:46:57pm
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட திட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணை வழிகாட்டு நெறிமுறைகளின்படி செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கின்போது, தனியார், பொது பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் கட்டாயமாக முககவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியையும் தவறாமல் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சமீரன் பேசினார். 

 

Tags :

Share via