கொரோனா தடுப்பில் மோடி அரசு தோல்வி ஏன் ?- மு.க.ஸ்டாலின் கேள்வி

by Editor / 21-04-2021 04:22:13pm
 கொரோனா  தடுப்பில் மோடி அரசு தோல்வி ஏன் ?-  மு.க.ஸ்டாலின் கேள்வி


 கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும்", "நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்" பேரதிர்ச்சியளிக்கிறது.
இதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் - மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறி உள்ளார். 
அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் - தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி - மாநில அரசுகளை "கிள்ளுக்கீரைகளாக" நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.
நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் - மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா?
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா - கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் - கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் "உலக மகா நிபுணர்" என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிகொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?

 

Tags :

Share via