பாயுமா, பதுங்குமா?

by Admin / 30-07-2019
பாயுமா, பதுங்குமா?

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு பல்வேறு கோணங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை மேலும் நீ்ட்டிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை

பாயுமா, பதுங்குமா?

இதனால் கடுப்பாகி போன சந்திரபாபு நாயுடு, பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பாஜவுக்கு எதிராக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தள தேசிய தலைவர் தேவகவுடா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணி பலம் பெற்று சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2 ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்து விட்டன. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ ரத ஊர்வலம் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவை தொகுதி மற்றும் 2 பேரவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி 4 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இப்படி செல்வாக்குள்ள மாநிலங்களிலும் பாஜ தனது மதிப்பை இழந்து வருகிறது. இருந்தாலும், அதுபற்றி பாஜ தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வழக்கமான தங்கள் பணிகளை தொடர்ந்து வருவது எதிர்க்கட்சிகளுக்கும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரபேல், ஜிஎஸ்டி, விலை வாசி உயர்வு என்று அடுக்கடுக்காக மத்திய அரசு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல் நெருங்கியுள்ளது. இந்த மாநில தேர்தல் முடிவுகளில் மக்களிடையே பாஜவுக்கு ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துவிடும். இந்த தேர்தல் முடிவுகளை வைத்து தான் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ பாயுமா? பதுங்குமா? என்று கணிக்க முடியும்.