அக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்

by Admin / 23-11-2018
அக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்

அண்ணாமலையெனும் மந்திரமே அக இருள் நீக்கும் அருமருந்தென, சித்தர்களும் அவர்தம் அடிதொழும் பித்தர்களும் போற்றித் துதிக்கும் ஜோதிப்பிழம்பான அருளாளன். உயிர்கசிந்து அடி தொழுத உமையாளுக்கு இடபாகம் அருளிய கொடையாளன்.

அடிமுடி தேடவைத்து திருமாலுக்கும் நான்முகனுக்கும் அகந்தை அகற்றிய முக்கண்ணன் அருள்பாலிக்கும் திருத்தலம் திருஅண்ணாமலை. ஞானநகரம், தலேச்சுரம், சிவலோகம், சுத்தநகரம், கவுரிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிரி, அண்ணாத்தூர், அண்ணாநாடு, அருணாத்திரி, அருணாசலம், அருணகிரி, திருவருணை என போற்றப்படும் ஆன்மிக பூமி. ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும், மகான்களும் தவமிருந்து அருவாக, உருவாக தரிசிக்கும் ஜோதிமலை காட்சி தரும் முக்தித் திருநகரம். இறைவனின் திருமேனியாய் திகழும் அண்ணாமலையில், கார்த்திகை திருநாளில் காட்சி தரும் மகாதீபத்தை தரிசிப்பது பிறவிப் பயன் என்பது அருளாளர்களின் அருள்வாக்கு. சைவத்தின் தலைநகரம் அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருஅருணை அருள்நகரம். எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். கண்ணாரமுத கடல். திருவிளையாடல் திருமூர்த்தியான ஈசன், சுயம்பு வடிவான ஜோதிமலையாக அருள்தரும் பேறுபெற்றது திருவண்ணாமலை. இறையே கிரியாக குடிகொண்ட அண்ணாமலையாருக்கு திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என எண்ணற்ற திருநாமங்கள். கண்ணாரமுதன், கலியுகமெய்யன், வினைதீர்க்க வல்லான், தேவராயன், பரதம் வள்ளபெருமான், பரிமளன், மலைமேல் மருந்தன், வசந்த வினோதன் என அடியார்களால் வர்ணிக்கப்பட்ட அருளாளர் அண்ணாமலையார் மூவுலகையாளும் ஈசன், பூவுலகில் குடிகொண்ட திருநகரம். அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்த திருத்தலம். யுகம், யுகமாக அருள்தரும் தீபமலையின் ஜோதிப் பிழம்பை தரிசிப்போர், பிறவியெனும் பெருங்கடலை கடந்தோராவர். முற்பிறவி பயனின்றி, யாவர்க்கும் வாய்க்காது தீபதரிசனம். அருள்வடிவான அண்ணாமலை, உள்ளீடற்ற உன்னத மலை என்பதை மகான்கள் உணர்ந்தனர். எனவேதான், உலகெங்கும் வாழும் மகான்களை எல்லாம் தன்னகத்தே ஈர்க்கும் தென்னகத்து காந்தமாக திருவண்ணாமலை திகழ்கிறது. பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். ஜோதி பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதால் இத்திருநாமம். அடி முடி காணாத பரம்பொருளாக, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியதால் அதிர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் வேண்டியதன் பலனாக, விண்ணுக்கும், மண்ணுக்கும் ஜோதி வடிவாக உயர்ந்து நின்ற பரம்பொருள் சாந்த வடிவாகிய சுயம்பு லிங்கமே நாம் வலம் வந்து வழிபடும் தீபமலை. அண்ணாமலைக்கு அருணாச்சலம் எனும் திருப்பெயரும் உண்டு. அருணம் என்ற சொல்லுக்கு சூரியன், வெப்பம், நெருப்பு எனும் பொருள். அசலம் எனம் சொல்லுக்கு மலை, கிரி எனும் பொருள். அருணாச்சலம் என்பது நெருப்பு மலை என்பதையே குறிக்கும். கயிலாயம் இறைவன் வாழும் இருப்பிடம். ஆனால், திருவண்ணாமலை அருணாச்சலமே சுயம்புவடிவான மலை. அண்ணாமலையின் உயரம் 2,668 அடியாகும். கடல் மட்டத்தில் இருந்து 167.44 மீட்டர் உயரம். 12.5 டிகிரி அட்சரேகையிலும், 79 டிகிரி தீர்க்க ரேகையிலும் எழுந்து நிற்கும் புனித பூமி. மலைச்சுற்றும் பாதையின் தொலைவு 14 கிலோ மீட்டர் (எட்டே கால் மைல்). கிழக்கு நோக்கியுள்ள மலையின் முகப்பு பகுதி மட்டும் 718 ஏக்கர் பரப்பளவு கொண்டது. எண்கோண அமைப்பில் எழுந்தருளிய சுயம்புவான மலையை சுற்றிலும் எட்டு லிங்கங்கள் (அஷ்ட லிங்கங்கள்) அருள்பாலிக்கின்றன. மலைச்சுற்றும் பாதையில் எட்டு திசைகளிலும் அமைந்துள்ள நந்திகள் அனைத்தும் லிங்கங்களை நோக்காமல் மலையை பார்த்தே அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை. மலையே சுயம்புவடிவான லிங்கமாக அமைந்திருப்பதால், தீபத்திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் மலையேறுவதில்லை. மலை உச்சியில் அண்ணாமலையார் திருப்பாதம் தவிர வேறு எந்தச் சிலைகளும் இல்லை. மலையின் அமைப்பை கீழ் திசையில் தரிசித்தால் ஒன்றாக தெரியும். அது ஏகனை உணர்த்தும். மலைச்சுற்றும் வழியில் தரிசித்தால் இரண்டாக தெரியும். அது அர்த்த நாரீஸ்வரரை உணர்த்தும். மலையின் மேற்கு திசையில் தரிசித்தால் மூன்றாக தெரியும். அது மும்மூர்த்திகளை உணர்த்தும். வட திசையில் தரிசித்தால் மலை நான்காக தெரியும். அது நான்கு வேதங்களை உணர்த்தும். மலையைச்சுற்றி முடிக்கும் நிலையில் ஐந்தாக தெரியும். அது பஞ்ச மூர்த்திகளை உணர்த்தும். மலையே மகேசனாக காட்சிதரும் தீபமலையின் அடியொற்றி அமைந்திருக்கிறது திருவண்ணாமலை திருக்கோயில். மண்ணுக்கும், விண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்த அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருக்கோயில் நவகோபுரங்களின் விஸ்வரூபம். கோபுரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வரலாற்று சிறப்பு மிக்கவை. கோயிலுக்குள் குடியிருக்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் மகிமைக்கு சாட்சிகளாகவே வானுயர்ந்து நிற்கின்றன, நவ கோபுரங்கள். கோபுர எழில் கொஞ்சும் திருக்கோயில் எனும் சிறப்பும் இத்திருத்தலத்திற்கு உண்டு. ஏக வண்ணத்தில் நிமிர்ந்து நிற்கும் நவ கோபுரங்கள், காலத்தால் அழியாத கலைப் பெட்டகங்களாக காட்சிதருபவை. திருக்கோயிலுக்குள் நுழைவோர், ராஜகோபுரத்தின் வழியாகச் செல்வதே முழுப் பயனைத் தரும். தரிசனம் முடிந்து திரும்புபோது, பிற கோபுர வாயில்களை பயன்படுத்தலாம். திருக்கோயில் ஆகம விதிகளின்படி, ராஜகோபுரத்து கணபதியை தொழுத பின்னரே பிற சந்நதிகளை தரிசிக்க வேண்டும். கோயிலுக்குள் நுழையும் முன்பு ராஜகோபுரத்து விதானத்தை வணங்குவதும், கோபுர நுழைவு வாயில் படிகளை, இறைவன் திருவடியாக கருதி கைதொட்டு வணங்குவதும் மரபு. கோயிலின் கிழக்கு திசையில் அமைந்திருப்பது ராஜகோபுரம். இதுவே திருக்கோயிலின் பிரதான வாயில். ஆனாலும், வெளிப் பிராகார வலம் வர கோயிலில் இருந்து புறப்படும் உற்சவ மூர்த்திகள், ராஜகோபுர வாயிலை பயன்படுத்துவது இக்கோயில் மரபு கிடையாது. ராஜகோபுரத்துக்கு அருகேயுள்ள திட்டி வாசல் வழியாகவே உற்சவர் புறப்பாடு நடைபெறும். ராஜகோபுரத்தின் உயரம் 217 அடி. மொத்தம் 11 அங்கணங்களை கொண்டது. கோபுரத்தின் அடி நிலை 135 அடி நீளம், அகலம் 85 அடி. தென்னிந்தியாவில் மிக உயரமான கோபுரங்களில் இரண்டாவது இடம் பெற்றது.

Share via