துளிகள்

by Admin / 24-11-2018
துளிகள்

ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். * ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய வீரர் ரோகித் சர்மா, குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் முழுமையான ஒரு நட்சத்திர வீரர். ஒரு நாள் போட்டியில் பல முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கை நான் ரசித்து பார்ப்பேன். எந்த பந்து வீச்சையும் எளிதாக சமாளிக்கும் திறமை கொண்ட அவர், பந்தை நாலாபுறமும் விரட்டக்கூடியவர். அவர் விளாசத் தொடங்கி விட்டால், தடுத்து நிறுத்துவது கடினம்’ என்றார். * அம்மான் நகரில் நடந்த நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஜோர்டானிடம் தோல்வியை தழுவியது. 10-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை நழுவ விட்ட ஜோர்டான் 25-வது நிமிடத்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கோல் போட்டது. அதாவது தனது கோல் பகுதியில் இருந்து ஜோர்டான் கோல் கீப்பர் அமெர் ஷபி அடித்த ஷாட்டை, இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து சரியாக கணிக்க தவறியதால் அது கோலாக மாறியது. 58-வது நிமிடத்தில் ஜோர்டான் வீரர் இசான் ஹட்டட் கோல் போட்டார். இந்திய வீரர் நிஷூகுமார் 61-வது நிமிடத்தில் கோல் திருப்பி ஆறுதல் அளித்தார். இந்த ஆட்டத்தில் காயத்தால் இந்திய நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * ஆஸ்திரேலிய பயணத்தில் ஆக்ரோஷத்தை தவிர்த்து, களத்தில் தன்னடக்கத்துடன் நிதானமாக நடந்து கொள்ளும்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி எழுத்துபூர்வமாக தகவல் அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது அபத்தமான தகவல் என்று கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

Share via