அஷ்ட பைரவர்களின் பெயர்கள்:

by Editor / 29-12-2021 01:16:52am
அஷ்ட பைரவர்களின் பெயர்கள்:

அஷ்ட பைரவர்:

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அஷ்ட பைரவர்களின் பெயர்கள்:
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர்.

1.அசிதாங்க பைரவர்:
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

2.ருரு பைரவர்:
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

3.சண்ட பைரவர்:
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்திவடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

4.குரோதன பைரவர்:
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

5.உன்மத்த பைரவர்:
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்திவடிவமாக சப் கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

6.கபால பைரவர்:
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார்.கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்திவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

7.பீக்ஷன பைரவர்:
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார்.சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்திவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

8.சம்ஹார பைரவர்:
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - அனுமன் காட்டில், கபால பைரவர் - லாட் பஜாரில், சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் - பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.
எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். பீட்ரூட்டை வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும்.
இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்

 

Tags :

Share via