அதிமுகவை பார்த்து நாடே சிரிக்கிறது- சட்டசபையில் முதல்வர் பேச்சு .

by Writer / 07-01-2022 02:11:28pm
அதிமுகவை பார்த்து நாடே சிரிக்கிறது- சட்டசபையில் முதல்வர் பேச்சு .

எதிர்கட்சியான அதிமுகவை பார்த்து நாடே சிரிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபையில் பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை தடுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்று குற்றஞ்சாட்டினார்.


இதையடுத்து எதிர்கட்சித் தலைவர் பேட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதில் அளித்தார். அதில், எதிர்கட்சித் தலைவர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். வெளியே பேசியவர் மழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிவிட்டது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று பேசி இருக்கிறார். அவருக்கு மழை வெள்ளம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.


அதிமுகவிற்கு இதை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது. 2015ல் டிசம்பரில் செம்பரம்பாக்கத்தை இரவில் திறந்தது நீங்கள்தான். முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கத்தை திறந்தது நீங்கள். பல நூறு பேர் பலியானார்கள். சொந்த நாட்டிலேயே தமிழ்நாடு மக்கள் அகதி ஆனார்கள். இது இயற்கை பேரிடர் அல்ல செயற்கை பேரிடர் என்று பத்திரிகைகள் தலையங்கம் கூட எழுதின.

நீங்கள் சரியாக செயல்பட்டு இருந்தால் அப்போது வெள்ளம் ஏற்பட்டு இருக்குமா. அதன்பின் மழை நீர் செல்ல ஏதாவது வழி ஏற்படுத்தினீர்களா? எதோ புண்ணுக்கு மருந்து தடவுவது போல கடைசியில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி என்று கூறிவிட்டு எப்படி எல்லாம் ஸ்மார்ட்டாக இவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நாடே இவர்களை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது.

மழை வெள்ளம்தான் இப்படி என்றால் சட்ட ஒழுங்கு சரியாக இருந்ததா? அதை பற்றி பேசவாது அவருக்கு தகுதி இருக்கிறதா? கொடநாடு கொலை வழக்கு நினைவு இருக்கிறதா.. பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடங்கி குட்கா வரை பல்வேறு குற்றங்களை செய்தவர்கள்தான் அவர்கள். இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

எல்லோருக்கும் இது தெரியும். நீங்கள் குற்றம் சொல்லும் முன் உங்கள் கையில் கறை இருக்கிறதா என்று பாருங்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது என்று கூறுகிறார்கள். எங்காவது ஒரு குற்றவாளி தப்பித்து இருக்கிறார்களா? யாராவது இருந்தால் சொல்லுங்கள்.. இப்போதே புடிக்கிறோம். யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதிமுகவை பார்த்து நாடே சிரிக்கிறது- சட்டசபையில் முதல்வர் பேச்சு .
 

Tags :

Share via