கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் கணித்துள்ளனர்.

by Admin / 20-01-2022 12:43:39pm
கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் கணித்துள்ளனர்.


மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல ஒமைக்ரான்பாதிப்பும் வேகமாக பரவி வருகிறது.

நேற்று மட்டும் 54 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 645 ஆக அதிகரித்து உள்ளது.

கேரளாவில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் அவர்களின் கற்றல் திறனை கண்டறியும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக சுகாதார துறையினர் கணித்துள்ளனர். இது தொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது.

கேரளாவில் கொரோனாவின் 3-வது அலை பரவல் மிகவேகமாக உள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் இதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் உயரும்.

இதற்கிடையே கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தபடி அவர் தினமும் கேரளாவில் கொரோனா பரவல் குறித்த விவரங்களை கேட்டு வருகிறார்.

தற்போது கொரோனா பரவல் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருப்பதை தொடர்ந்து அவர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

அமெரிக்காவில் இருந்தபடி கானொலி காட்சி மூலம் இன்று இந்த ஆலோசனை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

இக்கூட்டத்தில் கேரளாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via