துப்பாக்கிகளுடன் போக்குக் காட்டிய கும்பல் - சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்

by Editor / 13-02-2022 09:41:30pm
துப்பாக்கிகளுடன் போக்குக் காட்டிய கும்பல் - சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்

வேலூர்: துப்பாக்கிகளுடன் போக்குக் காட்டிய கும்பல்! - சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்

துப்பாக்கிகள், கஞ்சாவுடன் பிடிபட்ட 5 பேரை போலீஸார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று பிடித்து, கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகிலிருக்கும் மேல்பட்டி ரயில் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை போலீஸார் சைகை மூலம் நிறுத்தும்படி கூறினர். ஆனால், போலீஸாரைக் கண்டவுடன் கார் அதிவேகமாக பாய்ந்து சென்றது. சுதாரித்துக்கொண்ட போலீஸார் தங்கள் வாகனத்தில் துரத்திச்சென்று காரை மடக்கினர். அப்போது, காரின் கதவை திறந்துகொண்டு அதிலிருந்த 8 பேர் தப்பி ஓடினர். போலீஸார் விடாமல் விரட்டிச்சென்று 5 பேரை பிடித்தனர். 3 பேர் பிடிபடாமல் ஓடிவிட்டனர்.

காரை சோதனையிட்டபோது, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம், மூன்றரை லட்சம் ரொக்கப் பணம், 5 கிலோ கஞ்சா இருந்தன. அவற்றையெல்லாம், காருடன் பறிமுதல் செய்த போலீஸார், பிடிப்பட்ட 5 பேரையும் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பேரணாம்பட்டு டவுன் லால் மஜித் தெருவைச் சேர்ந்த இம்ரான், மாதவன், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிபாலன், மணலியைச் சேர்ந்த அசோக்குமார், திருவொற்றியூரைச் சேர்ந்த பாட்ஷா என்பது தெரியவந்தது.

போலீஸாரிடம் சிக்கிய பேரணாம்பட்டைச் சேர்ந்த இம்ரான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்.... பேரணாம்பட்டு நகரில் காரை வேகமாக ஓட்டி பொது மக்கள் மீது மோதிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். அப்போதே, அவரிடம் துப்பாக்கி, போலி நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேரணாம்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், குண்டர் தடுப்புக் காவலிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், வெளியில்வந்த இம்ரான் கடந்த ஜனவரி மாதம், பேரணாம்பட்டில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர், சென்னை ரௌடிகளுடன் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியதும், விசாரணையில் தெரியவந்திருக்கிறது

ஆந்திர மாநிலத்திற்கு காரில் சென்ற இந்த கும்பல், பலமநேர் பகுதியில் சுமார் 35 கிலோ எடையிலான கஞ்சாவை வாங்கியுள்ளனர். அதில், 30 கிலோ கஞ்சாவை விற்று அதில் கிடைத்த பணத்துடன் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் லத்தேரி-காட்பாடி இடையே வரும்போது காரை தடுத்து நிறுத்தி காட்பாடி போலீஸார் சோதனையிட முயன்றனர். அப்போது, காட்பாடி போலீஸாரை இடித்துத் தள்ளிவிட்டு தப்பினர். அங்கிருந்து தப்பிய நிலையில்தான் பேரணாம்பட்டு அருகே சிக்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், 5 பேரை கைது செய்த போலீஸார் குடியாத்தம் சப்-மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவான இம்ரானின் அண்ணன் இம்ராஸ், ஹக்கீம், தேவா ஆகிய மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

துப்பாக்கிகளுடன் போக்குக் காட்டிய கும்பல் - சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்
 

Tags : Police in riot gear with guns - Police in riot gear - Police in riot gear with guns - Police in riot gear

Share via