சபாநாயகராக மு.அப்பாவு    துணை சபாநாயகராக  கு. பிச்சாண்டி பதவி ஏற்றனர்

by Editor / 12-05-2021 03:59:25pm
சபாநாயகராக மு.அப்பாவு    துணை சபாநாயகராக  கு. பிச்சாண்டி பதவி ஏற்றனர்



தமிழக 16ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகராக மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர்  பதவி ஏற்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த மே 7-ஆம் தேதி முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.பின்னர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பிச்சாண்டி, நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே சபாநாயகர் தேர்தலில் ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டியும் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சித் தலைமை அறிவித்தது.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 12 மணி வரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வானதாகத் தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று  சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். முதல்வர் ஸ்டாலின், பேரவை முன்னவர் துரைமுருகன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை அழைத்துச்சென்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் முதல்வர் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சபாநாயகரை வாழ்த்திப் பேசிய , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற ஒத்துழைப்போம். பேரவைத்தலைவர் ஆசிரியரைப் போல நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
தொடர்ந்து துணைச் சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாகச் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் சபாநாயகராகப் பதவி ஏற்றுள்ள அப்பாவு 18ஆவது சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via