ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது

by Editor / 18-03-2022 11:42:57am
ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் எழுந்தருள செப்பு தேரோட்டம் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மாநிட பெண்ணாக பிறந்து  பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டி அரங்கனை  அடைந்தார். 

பிரசித்தி பெற்ற இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருதளத்தில் இரண்டு ஆழ்வார்கள் பிறந்து வாழ்ந்தார்கள் என்பது முக்கிய அம்சமாகும். இத்தளத்தில் ஸ்ரீ ஆண்டாளின் அவதார நட்சத்திரமான ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் ஆகும். இந்த வருடத்திற்கான திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த வாரம் துவங்கியது. 

தொடர்ந்து ஒருவார காலமாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் பங்குனி உத்திரம் தினமான இன்று மாலை 7 மணிக்கு திரு ஆடிபூர கொட்டகையில் வைத்து நடைபெற உள்ள நிலையில் காலையில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் எழுந்தருள செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷம் இடையே நான்கு ரத வீதிகள் வழியாக வந்த தேர் நிலையத்தை அடைந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

Tags :

Share via