சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் செப்., 13ஆம் தேதி பரிசீலனை

by Editor / 25-08-2022 04:43:55pm
சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் செப்., 13ஆம் தேதி பரிசீலனை

எஸ்என்சி லாவ்லின் வழக்கை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 13ஆம் தேதி விசாரிக்கிறது. பட்டியலில் இருந்து வழக்கை மாற்ற வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 13-ம் தேதி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி யு.யு.லலித் உத்தரவிட்டார்.

1998 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் மின்துறை அமைச்சராக பிணராயி விஜயன் இருந்தார். அப்போது, 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு ரூ. 92.3 கோடியை அளிக்கவில்லை என்பதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via