சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

by Staff / 17-09-2022 01:31:59pm
சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகள் சனிக்கிழமை நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டன.

நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை இனமானது, சுமார் ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியாக நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் சனிக்கிழமை இங்கு வந்தடைந்தன.

இந்தியாவில் இந்த இனம் 1952இல் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அரசு அறிவித்தது. இந்தியாவில் கடைசி சிறுத்தை 1947இல் இறந்தது. இந்த ஆண்டு ஜூலை 20 அன்று நமீபியாவில் இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் ஐந்து பெண் சிறுத்தைகளும் மூன்று ஆண் சிறுத்தைகளும் இந்தியாவிற்கு வந்துள்ளன. நமீபியாவில் இருந்து இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் விமானம் இன்று காலை குவாலியர் வந்தடைந்தது. புலி முகம் பதிக்கப்பட்ட பிரத்யேக விமானம் மூலம் சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. குவாலியரில் இருந்து விமானப்படைக்கு ஹெலிகாப்டரில் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காலை 11.30 மணியளவில் மூன்று சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட சிறுத்தைகளை மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். அவருடன் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வனத்துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மரக்கூண்டுகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உடன் சிறுத்தைகள் சீறிப்பாய்ந்து சென்று சிறிது தொலைவில் திரும்பி நின்று சுற்றும் முற்றும் பார்த்தன. கண்டம் விட்டு கண்டம் விமானத்தில் பறந்துவந்த சிறுத்தைகள் இனி இந்திய நாட்டின் வனத்தில் கம்பீரமாக நடைபோடும் என்பதில் சந்தேகமில்லை.

 

Tags :

Share via