விடுபட்ட பகுதிகளைக் கையால்நிரப்பிய   நீதிபதிக்கு  உயர் நீதிமன்றம் கண்டனம்

by Editor / 12-06-2021 06:03:05pm
விடுபட்ட பகுதிகளைக் கையால்நிரப்பிய   நீதிபதிக்கு  உயர் நீதிமன்றம் கண்டனம்

 


திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர், அதிக வட்டிக்குப் பணம் கடனாகக் கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, ஆர்த்தி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அளித்துள்ளார்.நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஆர்த்தி தரப்பில் திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, புகார் குறித்து விசாரிக்கும்படியும், விசாரணையில் குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல வழக்கை முடிப்பதாக இருந்தால் அது குறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி விசாரணை நடத்திய காவல் துறையினர், வழக்கை முடித்து, அது குறித்த அறிக்கையை மனுதாரருக்கு அனுப்பிவைத்தனர்.இந்நிலையில், ஆர்த்தி தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.இந்த மனு மீதான விசாரணையின்போது, ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி நிர்மல்குமார், திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்திசெய்து உத்தரவு பிறப்பித்தது தெரியவந்தது.இத்தகைய அஜாக்கிரதையாகவும், மெத்தனப்போக்குடனும் செயல்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.பின்னர், இதேபோல எத்தனை உத்தரவுகளை அந்தக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார் என விசாரணை நடத்தி, ஜூன் 22ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

Tags :

Share via