ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 61 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

by Staff / 27-09-2022 04:53:24pm
 ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 61 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட சமூகநல அலுவலர் ஹரிதேவி, மனநல டாக்டர் நிரஞ்சனா தேவி, வருவாய் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர், அவ்வாறு சுற்றித்திரிந்த 61 பேரை கண்டுபிடித்து, அவர்களை கோவில்பட்டி, நாசரேத் மற்றும் அடைக்கலாபுரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், 'இவர்களுக்கு உணவு, உடை போன்றவை வழங்கப்படும். மேலும், திருச்செந்தூர் பஸ்நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்' என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via