99 குழந்தைகள் இறப்பு மருந்துகளுக்கு தடை

by Staff / 20-10-2022 05:41:09pm
99 குழந்தைகள் இறப்பு மருந்துகளுக்கு தடை

இந்தோனேசியாவில் சிறுநீரக நோயால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து குழந்தைகளுக்கான திரவ வடிவிலான மருந்துகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 20 மாகாணங்களில் இருந்து 206 புகார்கள் பதிவாகியுள்ளன. சிறுநீரக நோய் முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. இதில் 99 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழப்பதன் பின்னணியில் சில சிரப்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், எந்த நோய்க்கு இந்த சிரப் கொடுக்கப்பட்டது என்றோ, அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா அல்லது இறக்குமதி செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இதனையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை சிரப் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளிடையே சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதை ஆய்வு செய்ய இந்தோனேசிய அரசாங்கம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இது உள்ளூர் சுகாதார மற்றும் குழந்தை மருத்துவ துறைகளின் அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. இந்தோனேசியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் குழந்தைகளிடையே சிறுநீரக நோய்கள் பதிவாகியுள்ளன.

முன்னதாக காம்பியாவில் இருமல் மருந்து (காஃப் சிரப்) சாப்பிட்டு சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். உலக சுகாதார நிறுவனம் பல மருந்துகளில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பதால் சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளது. இந்த சிரப்கள் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் நான்கு சிரப்களுக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via