தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

by Editor / 04-12-2022 07:38:17am
தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.



தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று 04-12-2022 முதல் 07-12-2022 வரை தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 04.12.2022 முதல் 06.12.2022 வரை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55-65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via