இரண்டு திருநங்கைகள் அரசு மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம்

by Editor / 04-12-2022 08:54:07am
இரண்டு திருநங்கைகள் அரசு மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம்

என்னால் முடியும்..தன்னால் முடியும்..இந்த சமூகத்தில் பல்வேறுவிதமான இடையூறுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து திருநங்கைகள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.  ஏளனமாக பேசியவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு கல்வி, கலை, அரசியல், சினிமா என பல்வேறுதுறைகளில் அவர்கள் முத்திரை பதித்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலங்கானாவில் புதிய வரலாறு ஒன்றை இரண்டு திருநங்கைகள் படைத்துள்ளனர். பிரச்சி ரதோடு, ருத் ஜான் பால் என்கிற அந்த இருவருக்கு தெலங்கானாவில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான உஸ்மானியா அரசு மருத்துவமனையில், மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தெலங்கானா வரலாற்றில் திருநங்கைகள் அரசு மருத்துவர்களாக பணி நியமனம் பெறுவது இதுவே முதல் முறையாகும். தாம் அரசு மருத்துவ அலுவலராக பணி நியமனம் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த ருத் ஜான் பால், திருநங்கை என்பதால் குழந்தை பருவத்திலிருந்தே தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்திலிருந்து பல்வேறு அவமதிப்புகளை தாம் சந்தித்தாக கூறிய ருத் ஜான் பால், எனினும் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தை அடைய கடினமாக  உழைத்ததாக தெரிவித்தார்.

தெலங்கானாவின் முதல் திருநங்கை அரசு மருத்துவர் என்பதை நினைத்து தாம் பெருமைகொள்வதாக கூறிய பிரச்சி ரதோடு, பாலின வேறுபாடுகள் இல்லாமல் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via