கொளத்தூரில் வண்ண மீன்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Editor / 26-06-2021 08:28:13pm
கொளத்தூரில் வண்ண மீன்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 

சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். வண்ண மீன்கள் வளர்ப்போர் மற்றும் விற்பனை செய்வோர் நலவாரியம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 வீடுகளில் வண்ண மீன்களை வளர்ப்பது தற்போது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த வண்ண மீன்கள் கடைகள் மற்றும் வார சந்தைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. அவ்வாறு இந்த மீன்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாக கொளத்தூர் விளங்குகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ண மீன்கள் சந்தையாக கொளத்தூர் உள்ளது. அந்த அளவிற்கு கொளத்தூருக்கும், வண்ணமீன்கள் விற்பனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கொளத்தூர் கங்கா திரையரங்கம் அருகில் பாடசாலை தெரு மற்றும் தெற்கு மாடவீதி ஆகிய இரண்டு தெருக்கள் முழுவதும் வண்ண மீன்கள் விற்கும் இடமாகவும், மீன் வளர்ப்பிற்கு தேவையான பொருட்களை விற்கும் இடமாகவும் விளங்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை தற்ேபாது பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் இங்கு வளர்க்கப்பட்ட மீன்களை சென்ட்ரல் அருகே உள்ள மூர்மார்க்கெட் பகுதியில் கொண்டு சென்று விற்றுள்ளனர். பிறகு 1998ம் ஆண்டு முதல் கொளத்தூர் பகுதியிலேயே வண்ண மீன்களை விற்க தொடங்கியுள்ளனர். தற்போது குறிப்பிட்ட இந்த 2 தெருக்கள் மட்டுமல்லாது கொளத்தூர் பகுதியில் மேலும் சில இடங்களிலும் இந்த வண்ண மீன் விற்பனை களை கட்டியுள்ளது. இங்கிருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து வண்ண மீன் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து விட்டு செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான வண்ண மீன்கள் இங்கிருந்து ரயில்கள் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த பகுதியில் 125 மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வண்ண மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வண்ண மீன்கள் விற்பனை செய்யப்பட்டாலும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவம்பேடு ஆகிய பகுதிகளில் மண் குட்டைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் குட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
கொளத்தூர் பகுதியில் மட்டும் இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர். ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையில் இங்கு மீன்கள் விற்கப்படுகின்றன. கோல்டு, ஷார்க், ஏஞ்சல், மாலிக், பைட்டர் உள்ளிட்ட மீன்களை பெரும்பாலும் பொதுமக்கள் வீடுகளில் வாங்கி வளர்த்து வருகின்றனர். இவற்றில் ஏஞ்சல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மீன்களை வெயில் காலங்களில் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இல்லையென்றால் அதிக வெப்பம் காரணமாக இறந்துவிடும்.
மீன்கள் அவற்றின் வகைக்கு ஏற்றாற்போல் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பாக, அரோனா போன்ற வாஸ்து மீன்கள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பொய்காப் போன்ற இவ்வகை மீன்கள் 20 ஆண்டு காலம் வரை உயிர் வாழ்கின்றன. இந்த வகை மீன்கள் தாய்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவை. வீடுகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு கடைகளில் இருந்து உணவு பொருட்கள் வாங்கி போடப்படுகின்றன. ஆனால், பண்ணைகளில் வளர்க்கப்படும் போது பூச்சிகளை பிடித்து மீன்களுக்கு உணவாக போடுகின்றனர். இந்த பூச்சி வகைகளை பிடிப்பதற்காக கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் காலை 3 மணி முதல் 6 மணி வரை ஈடுபடுகின்றனர்.

 

Tags :

Share via