ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்

by Staff / 11-02-2023 02:21:47pm
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வெளியிட்டார்.

அதில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் கட்சிகளுக்கான சின்னங்களும் நேற்று ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கை சின்னத்திலும், அதிமுக இரட்டை இலை சின்னத்திலும், தேமுதிக முரசு சின்னத்திலும், நாம் தமிழர் கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனைகளற்ற ஆதரவு வழங்கும் என அறிவித்திருந்தார்.இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகள் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via