நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த  அரசு மருத்துவரின் கணவர் கைது.

by Editor / 02-02-2024 09:56:51pm
 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த  அரசு மருத்துவரின் கணவர் கைது.

தென்காசி மாவட்டம்  பாவூர்சத்திரம்  அருகே உள்ள  சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர்  ஜீவா(35) இவர்  ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஜெயராமன்(38)  பார்மசி படித்து முடித்துள்ளார்.  இவர்களது  கிளினிக் தென்காசி - ஆலங்குளம் நெடுஞ்சாலை சிவகாமிபுரம்  விலக்கில் இயங்கி வருகிறது. மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு  பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் மருத்துவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்கள் சென்ற நிலையில்  புகாரின்   பேரில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேல் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தபோது ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரிய வந்தது.  இதையடுத்து கோட்டாச்சியர் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.  மேலும் அவரது மருத்துவமனைக்கு தற்போது சீல்வைக்கப்பட்டுள்ளது.

 பாவூர்சத்திரம் அருகே மனைவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த நிலையில் சாதாரண  பார்மசி மட்டும் முடித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :  நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த  அரசு மருத்துவரின் கணவர் கைது.

Share via