அவினாசியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசார் தீவிரம்

by Admin / 03-08-2021 02:54:16pm
அவினாசியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசார் தீவிரம்



அவினாசி மேற்கு ரத வீதி சாலையில் எந்நேரமும் நெரிசல் காணப்படுவதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட பல நேரங்களில் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.

அவிநாசி மேற்கு ரத வீதியின் இருபுறமும் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதாலும், அங்குள்ள கடைக்காரர்கள், தங்கள் கடைகளின் பெயர் பலகைகளை பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்தில் வைத்துக் கொள்வதாலும்  நெரிசல் ஏற்படுகிறது.

அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நோயாளிகள், மேல் சிகிச்சைக்காக கோவை அல்லது திருப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது மேற்கு ரத வீதி வழியாக கடந்து செல்வது தான் சுலபம். ஆனால் அந்த சாலையில் எந்நேரமும் நெரிசல் காணப்படுவதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட பல நேரங்களில் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இதையடுத்து டி.எஸ்.பி.,பாஸ்கரன் உத்தரவின் பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் மேற்கு ரத வீதியில் உள்ள கடைக்காரர்கள் - திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மேற்கு ரத வீதியின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் நிறுத்திக்கொள்ளும் வகையில் கயிறு (ரோப்) கட்டுவது என  முடிவெடுக்கப்பட்டது.பாரத ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் உள்ள வாகன பார்க்கிங் தளத்தில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களையும் பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

 

Tags :

Share via