பரிதாப நிலையில் பாசன கால்வாய்கள் ஊரக திட்ட பணியாளர்கள் மூலம் தூர்வாரப்படுமா?

by Admin / 04-08-2021 02:53:49pm
பரிதாப நிலையில் பாசன கால்வாய்கள் ஊரக திட்ட பணியாளர்கள் மூலம் தூர்வாரப்படுமா?



   
பகிர்மான மண் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் புதுப்பாளையம் கிளை கால்வாயில் 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பரிதாப நிலையிலுள்ள கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் திருப்பூர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டரில் இருந்து பிரியும் புதுப்பாளையம் கிளை கால்வாயில் பெயரளவுக்கு புதர்கள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. இதனால் நீர் விரயம் அதிகரித்து கடைமடை பகுதிகள் பாதிக்கும்.
 
மேலும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் செல்லும். பகிர்மான மண் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

எனவே உடனடியாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக  கால்வாய்களை சீரமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாக இப்பணிகளை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via