QR கோட் மீது ஸ்டிக்கர் ஒட்டி நூதன மோசடி

by Editor / 23-08-2021 09:47:05am
QR கோட் மீது ஸ்டிக்கர் ஒட்டி நூதன மோசடி

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் டீக்கடை நடத்திவரும் துரை என்பவர் பணம் வசூலிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையான QR Code-ஐ பயன்படுத்தி வந்துள்ளார்.

வங்கிக் கணக்கில் வரவு செலவு விவரங்களைப் பார்த்தபோது, அதில் மாத வருமானம் வெகுவாக குறைந்திருப்பதை அறிந்து டீக்கடை உரிமையாளர் துரை அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆராய்ந்த போதுதான் அவர் வைத்திருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து துரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வல்லரசு ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் ஃபோன் பே நிறுவனத்தில் பணியாற்றிய வல்லரசு, QR Code மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. டீக்கடை உரிமையாளர் துரையின் கடையின் QR Code மீது, அவர்கள் வேறொரு QR Code ஸ்டிக்கரை அடையாளம் தெரியாதபடி ஒட்டிவிட்டனர்.

இதனால் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், அந்த பணம் மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றிருக்கிறது.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இவர்கள் வேறு எந்த இடங்களில் எல்லாம் இதே பாணியில் மோசடி செய்திருக்கிறார்கள் என விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via