குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் - சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

by Admin / 30-08-2021 02:09:59pm
குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் - சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்


   
50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு இதயம், புற்றுநோய், நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்தபோது பல்வேறு தொற்று சாராத நோய் உள்ளவர்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தபோதும் மருத்துவமனைக்கு செல்ல தயங்கினர்.

பல்வேறு துறை சார் மருத்துவமனைகள் கூட தொற்று காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களை மட்டும் அனுமதித்தன. திருப்பூரிலும் இத்தகைய நிலை இருந்தது. தொற்று சாராத நோய் உள்ளவர்கள் தொற்று தணிந்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளுக்கு நேரடி சிகிச்சைக்கு செல்கின்றனர்.
 
இதுகுறித்து திருப்பூர் சுகாதாரத்துறையினர் கூறியதாவது:

இதயம், புற்றுநோய், ஆஸ்துமா, சர்க்கரை, சிறுநீரகம் உள்ளிட்ட தொற்று சாரா நோய்கள் நான்கில் ஒருவருக்காவது இருக்கிறது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு இதயம், புற்றுநோய், நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் தொற்று சாராத நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்க்க முடியும்.

உலக அளவில் தொற்று தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டோர் கூட உடல் பருமன், சர்க்கரை நோய், வாழ்க்கை முறையால் ஏற்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள்தான். ஆரோக்கிய மேம்பாட்டிற்கான வழிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை உள்ளிட்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம், மாத்திரைகள் வழங்கும் வகையிலான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இது நோயாளிகளுக்கு நிச்சயம் நன்மையைத் தரும் என்றனர்.

தொற்று பரவல் காலத்தில் பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பல பிரசவங்கள் சுகப்பிரசவங்களாகவும் அமைந்தன. தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. அதேசமயம் குழந்தைகளுக்கு வழக்கமாக போடப்படும் தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இயலாமல் போனது.

பெற்றோர் முன்வந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தயங்கினர். தொற்று தணிந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படும்போது பிற சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நோயாளிகள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒத்திப்போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via