மூன்றாவது அலை: அதிகாரபூர்வ அறிவிப்பு

by Editor / 09-09-2021 05:48:55pm
மூன்றாவது அலை: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி விட்டதாகவும் அமெரிக்காவில் இன்று ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்றும் என்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அலை தோன்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக 300க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 400ஐ தாண்டி விட்டது என்றும் இதனால் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மூன்றாவது அலை தோன்றி விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை அனைவரும் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்றும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

மும்பை மட்டுமின்றி நாக்பூரிலும் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அமைச்சர் நிதின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே நாக்பூரில் தளர்வுகளை குறைத்து இன்னும் மூன்று நாட்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து படிப்படியாக நாடு முழுவதும் மூன்றாவது அலை விரைவில் தோன்றும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via