நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை: தமிழக அரசு விளக்கம்

by Editor / 22-09-2021 09:13:20am
நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை: தமிழக அரசு விளக்கம்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவுவங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரித்தது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை. இந்நிலையில், 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via