"இனி மேட் இன் இந்தியா அல்ல, மேட் இன் தமிழ்நாடு" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

by Editor / 22-09-2021 07:59:04pm


தமிழ்நாடு அரசு , தொழில்துறை சார்பில் " ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு " என்னும் மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த ஏற்றுமதி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார் .
அப்போது பேசிய அவர் , இன்றைய தினம் 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது . இதன் மூலமாக 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது .

இந்த முதலீடுகள் , சென்னை , திருவள்ளூர் , இராணிப்பேட்டை , கிருஷ்ணகிரி , மதுரை , தஞ்சாவூர் , தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக , பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு , ஏற்றுமதியைப் பெருமளவில் பெருக்கிடுவதற்கு , எந்த நிலையிலும் , ஏற்றுமதியாளர்களுக்கும் , முதலீட்டாளர்களுக்கும் இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக நிற்கும் .

அனைத்து ஆதரவுகளையும் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன் . இந்நிறுவனங்கள் தொழில் தொடங்க , தூண்டுதலாக அமைந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும் தொழில்துறை அதிகாரிகளையும் மனதார பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் .

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்தது இல்லை . அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது . உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது .நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் . உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்கிட வேண்டும் . அதாவது உலகம் முழுக்க நாம் செல்ல வேண்டும் .

உலகம் , தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும் . மொத்தத்தில் தமிழகத் தொழில்துறையின் உள்ளங்கையில் உலகம் இருக்க வேண்டும் . அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும் .

இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார் .

 

Tags :

Share via