நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகள் - முழுவிவரம் என்னென்ன?

by Editor / 23-10-2021 08:18:14pm
 நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகள் - முழுவிவரம் என்னென்ன?

 

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.


பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 23-10-2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.


பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதே போன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் (both contact and non contact sports) நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக (Therapeutic purposes) நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.


ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

 

Tags :

Share via